ரஜினி குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு பேசியிருப்பது புண்படுத்தும் விதமாக உள்ளது என்றும் உடனடியாக அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காரைக்குடி நகரத்தார் சங்கம் தெரிவித்துள்ளது.

ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி உள்ள காலா படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய நதிகளை இணைப்பதே என் வாழ்வின் ஒரே கனவு என்று பேசியிருந்தார். 

இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசும்போது, ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன் என்றார். அந்த கருத்து நல்ல கருத்துதான். நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். நதிகளை இணைத்தால் நல்லதுதானே. நல்லதை யார் செய்தால் என்ன? நதிகளை இணைக்க நிதி தருவதாகக்  கூறினார். அதை முதலில் அவர் தர வேண்டும் என்றார். 

நதி இணைப்பை பயன்படுத்தி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க உள்ளதாக கூறப்படுகிறதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு, வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியைப் பிடிக்கலாம்; ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றார். ஆட்சியைப் பிடிப்பது மக்கள் கையில்தான் இருக்கிறது. மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள் என்ன முடி செய்கிறார்களோ அதுதான் நடக்கும் என்றார். ஆட்சியை பிடிக்க முடியாது. ஆட்சியை பிடிப்பது மக்களின் கையில்தான் உள்ளது. அவர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ அதான் நடக்கும். அதை ரஜினி முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

இந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சு குறித்து, காரைக்குடி நகரத்தார் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, காரைக்குடி நகரத்தார் சங்க தலைவர் ரங்கநாதன், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். ரஜினி பற்றிய அரசியல் விமர்சனத்தில் ரஜினி தமிழக ஆட்சியைப் பிடிக்க முடியாது. காரைக்குடி ஆச்சியைப் பிடிக்கலாம் என்று அமைச்சர் கூறியிருப்பது புண்படுத்தும் பேச்சாகும் என்று கூறினார்.

ஆச்சி என்பது நகரத்தார் சமூகத்தில் மணமான பெண்களைக் குறிக்கின்ற மரியாதைக்குரிய சொல். அவர்களை யார் வேண்டுமானாலும் பிடிக்கலாம் என்று அமைச்சர் கூறியுள்ள நாராசமான வார்த்தைகளைக் கேட்கிறபொழுது தங்கள் நெஞ்சம் கொதிப்பதாக காரைக்குடி நகரத்தார் சங்க தலைவர் ரங்கநாதன் தெரிவித்தார்.

இந்த நிலையில், காரைக்குடி ஆச்சிகளை தரக்குறைவாக பேசியதாக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிராக, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. நகரத்தார் சார்பில் இன்று மாலை ஐந்து விளக்கு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக காரைக்குடியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.