கன்னியாகுமரி தொகுதியில் எம்பியாக தனது தந்தை எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை அருகில் இருந்து பார்த்த காரணத்தினால் தான் அவருக்கு பிறகு அந்த தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக வேண்டும் என்கிற ஆசை விஜய் வசந்திற்கு இருந்தது. ஆனால் திடீரென இந்த முடிவில் அவர் பின்வாங்கியுள்ளார்.

கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்த குமார் கடந்த வாரம் காலமானார். இதனை தொடர்ந்து அவரது உடல் அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தனது தந்தை முழுமையான ஒரு வாழ்வை வாழ்ந்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டதாக கூறி அனைவரையும்நெகிழ வைத்தார். இதனை தொடர்ந்து ஒரு தனியார் தொலைக்காட்சி விஜய் வசந்தை பேட்டி எடுத்தது. அப்போது அவரிடம் தந்தை எம்பியாக இருந்த கன்னியாகுமரி தொகுதியில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் என்று பதில் அளித்தார் விஜய் வசந்த்.

அதோடு மட்டும் அல்லாமல், தனது தந்தை எம்பியாக இருந்த கன்னியாகுமரி தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என்று தனது தந்தையின் நண்பர்கள் வலியுறுத்தி வருவதாக கூறியிருந்தார். கட்சி மேலிடம் அனுமதி அளித்தால் தான் கன்னியாகுமரியில் போட்டியிட தயார் என்றும் விஜய் வசந்த் தெரிவித்திருந்தார்.இதனால் அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சி யாருக்கு ஒதுக்கும் என்கிற கேள்வி எழுந்தது. இதற்கிடையே திடீரென தனக்கு தனது தந்தையின் தொழில் மற்றும் குடும்பத்தை பார்க்க வேண்டிய கடமை உள்ளதாகவும் தேர்தலில் போட்டியிடும் மனநிலையில் தான் இல்லை என்று விஜய் வசந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறினார்.

முதல் நாள் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த விஜய் வசந்த் திடீரென மறுநாளே தனக்கு தேர்தலில் போட்டியிட ஆர்வம் இல்லை என்று கூறினார். இதன் பின்னணியில் நடந்தது என்ன என்று கேள்விகள் எழுந்தன. அதற்கு விஜய் வசந்தின் குடும்பத்தினர் அவர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பவில்லை என்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்காக வசந்தகுமார் மிக கடுமையாக உழைத்த நிலையிலும், அவருக்கு உரிய அங்கீகாரத்தை காங்கிரஸ் வழங்கவில்லை என்று அவருடைய மனைவி நினைக்கிறார். மேலும் காங்கிரஸ் கட்சி தனது கணவரை பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் கருதுகிறார்.

காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி தனது கணவருக்கு கிடைக்காதது அவரது மனைவிக்கு மிகுந்த வேதனையை கொடுத்துள்ளது. இதனால் தான் தனது கணவர் உடலை காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு கொண்டு செல்ல அவர் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் தனது மகனும் காங்கிரஸ் கட்சியில் நீடிப்பதை அவரது தாய் விரும்பவில்லை என்கிறார்கள். தேர்தலுக்கு மட்டும் தனது மகனை பயன்படுத்திக் கொண்டு அவருக்கும் உரிய அங்கீகாரதைதை காங்கிரஸ் வழங்காது என்று அவர் கருதியுள்ளார்.

இதனால் தான் தனது மகனை தேர்தல் ஆசையை விடுத்து தந்தையின் தொழிலையும் குடும்பத்தையும் பார்க்குமாறு அவர் தனது மகனிடம் கண்டிப்பாக கூறியுள்ளார். இதனை அடுத்தே தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று விஜய் வசந்த் தெரிவித்ததாக சொல்கிறார்கள். ஆனால் தேர்தல் சமயத்தில் எப்படியும் தம்பியின் மனதை மாற்றிஅவரை கன்னியாகுமரி எம்பியாக்குவது உறுதி என்று வசந்தகுமாரின் நண்பர்கள் கூறி வருகிறார்கள்.