தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மாசு அதிகரிப்பதாகவும் அதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் கடந்த பல வருடங்களாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 2018ம் ஆண்டு மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து இருந்தனர். இதனிடையே போராட்டத்தின் 100வது நாளில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது.

கலவரத்தை தவிர்க்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றதாக ஆளும் அதிமுக அரசு மீது பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். இதுதொடர்பாக விசாரணை குழு அமைத்து அரசு விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே தூத்துக்குடியில் அத்துயர சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து தற்போதைய தூத்துக்குடியின் பாராளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களை நினைவுகூர்ந்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 2-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின் மீது நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. 'கலவரத்தைக் கட்டுப்படுத்த' எனும் பொய்யைக் கட்டவிழ்த்து போராடிய மக்களின் உயிர்குடித்தது அரசு பயங்கரவாதம். துப்பாக்கிச் சூட்டில் சிந்திய இரத்தத்துக்கான நீதி கிடைத்திருக்கிறதா ? இல்லை. மக்கள் எழுச்சியின் முன் எந்த ஏமாற்று வேலைகளும் எடுபடாது என்பதை இந்த அரசுக்கு உணர்த்திட நாம் உறுதியேற்போம். தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம். இவ்வாறு கனிமொழி பதிவிட்டிருக்கிறார்.