தமிழ்நாட்டில் நாம் பாதுகாப்பாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். அதை என்றும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அப்படி ஒரு சூழலை என்றும் சந்திக்காது. ஏனெனில், இது பெரியார் மண், அண்ணா மண், கருணாநிதி வாழ்ந்து ஆட்சி செய்த மண். ஸ்டாலின் ஆண்டுக்கொண்டிருக்கிற மண்.

பாஜகவும் அதிமுகவும் வேறுவேறு அல்ல. இருவரும் ஒன்றுதான் என்பதைப் புரிந்துக்கொண்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழி பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் அமைதியான மாநிலமாக, முன்னேற்றத்தை நோக்கி செல்லும் மாநிலமாக, வாய்ப்புகள் கிடைக்கும் மாநிலமாக, எல்லோரும் சமம் என்று இருக்கக்கூடிய மாநிலமாக, சிறுபான்மையின மக்கள் நிம்மதியாக வாழும் மாநிலமாக உள்ளது. தமிழகத்தை ஒற்றுமையாக தமிழர்களாக, இணைந்து வாழக்கூடிய இடமாக பாதுகாத்து வைத்திருக்கிறோம். பக்கத்தில் உள்ள கர்நாடகாவில் என்னென்ன நடக்கிறது என்பதெல்லாம் பார்க்கிறோம். பாஜக செய்யும் மாநிலங்களில் பெண்கள் எதை உடுத்திக்கொண்டு கல்லூரிக்கு, பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதை பிரச்சினையாக்கி, மதத்தின் பெயரால் கலவரங்கள் நடைபெற்று, பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு கிடக்கின்றன. 

இனி நம் பிள்ளைகள் வீட்டுக்குப் பத்திரமாக வருவார்களா என்று பெற்றோர்கள் பதற்றத்தில் இருக்கும் மோசமான நிலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டில் நாம் பாதுகாப்பாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். அதை என்றும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அப்படி ஒரு சூழலை என்றும் சந்திக்காது. ஏனெனில், இது பெரியார் மண், அண்ணா மண், கருணாநிதி வாழ்ந்து ஆட்சி செய்த மண். ஸ்டாலின் ஆண்டுக்கொண்டிருக்கிற மண். இங்கே திராவிட கொள்கைகள் நம்மை ஒற்றுமையாகப் பாதுகாத்து வைத்திருக்கும். என்றாலும் நாமும் கவனமாக இருக்க வேண்டும். தவறாக ஒரு ஓட்டுக்கூட போடக்கூடாது. தவறாக வாக்களித்தால் நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு இருக்காது. 

கர்நாடகாவில் இஸ்லாமிய சகோதரிகள் புர்கா அணிந்துக்கொண்டு செல்லக் கூடாது என்று சொல்பவர்கள்தான், ஓராண்டுக்கு முன்பு அங்கு இருக்கக்கூடிய இந்து, கிறிஸ்தவப் பெண்கள் என்ன உடுத்திக்கொண்டு செல்ல வேண்டும் என்பதோடு அந்த இளம் பெண்களை தெருவில் வைத்து அவமானப்படுத்தினார்கள். ஒரு பெண்ணின் உடையை அவள்தான் தீர்மானிக்க வேண்டும். வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது. உங்களுக்கு எது வசதியோ அதை அணிந்துக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட உரிமைகள் தமிழ்நாட்டில் இன்று இருக்கின்றன. அதை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி இல்லை என்று சொல்கிறார்கள்.

ஆனால், ஒட்டுமொத்தமாகக் கூட்டணி இருக்கிறது என்பதை அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள். விவசாயிகளுக்கு எதிராக சட்டங்கள், குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது எல்லாவற்றையும் ஆதரித்தவர்கள் அதிமுக என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இருவரும் வேறுவேறு அல்ல. இருவரும் ஒன்றுதான் என்பதைப் புரிந்துக்கொண்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டும். பாஜக மக்களுக்கு எதிராக என்னென்ன திட்டங்களை கொண்டு வர முடியுமோ அதையெல்லாம் கொண்டு வந்திருக்கிறது. அவர்கள் கொண்டு வந்த நீட் தேர்வால் நம்முடைய பிள்ளைகள் மருத்துவம் படிக்க முடியவில்லை. அதை எதிர்த்து நாம் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம். அதையும் எதிர்க்கிறது பாஜக. அக்கட்சியோடு கூட்டணியில் இருப்பது அதிமுக என்பதை மறந்துவிடக் கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இல்லை என்று அவர்கள் அறிவித்தாலும் தேசிய அளவில் கூட்டணியாம். அதைப் புரிந்துகொண்டு நாம் வாக்களிக்க வேண்டும்.” என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.