திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வந்த சாலையோர வியாபாரிகளின் தள்ளுவண்டியை தள்ளிவிட்ட நகராட்சி ஆணையரின் செயல் சர்ச்சையை கிளப்பி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி ஆணையராக இருப்பவர் சிசில் தாமஸ். நேற்று அப்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சாலையோரத்தில் வியாபாரிகள் சிலர் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை தள்ளுவண்டிகளில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். அங்கு வந்த தாமஸ் விதிகளை மீறி விற்பனை செய்வதாக அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவரிடம் வியாபரிகள் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தனர். அதை ஏற்காத தாமஸ் தள்ளு வண்டிகள், பழக்கூடைகளை தள்ளிவிட்டும் பொருள்களை காலால் எட்டி உதைத்தும் அராஜகம் செய்திருக்கிறார். அதை அங்கிருந்த சிலர் காணொளியாக பதிவு செய்யவே அது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி இருக்கிறது. வியாபாரிகள் விதிகளை மீறி நடந்திருந்தாலும் கூட நகராட்சி ஆணையர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர இவ்வாறு மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படக் கூடாது என பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஏழை வியாபாரிகள் என்றால் இளக்காரமாக தெரிகிறதா? என மக்களவை உறுப்பினரும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.

 

இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற  செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது ? இவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தனது செயலுக்கு நகராட்சி ஆணையர் தாமஸ் வருத்தம் தெரிவித்திருப்பது குறிப்பிடதக்கது.