திமுக சார்பில் போட்டியிட்டு தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்றவர் கனிமொழி. தனது தொகுதியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள தூத்துக்குடி வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். தமிழை வைத்து திமுக வியாபாரம் செய்வதாக கூறிய அமைச்சர் ஜெயக்குமாரின் கேள்விக்கு பதிலளித்த அவர் அதிமுகவே பலமுறை இந்தி எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி இருக்கிறது. அந்த கட்சியின் வரலாறு தெரிந்திருந்தால் ஜெயக்குமார் இவ்வாறு பேசமாட்டார். அவரின் நாகரிகமற்ற பேச்சுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை என்று தெரிவித்தார்.

மேலும் ஒரு மொழி, ஒரு மதம் என்கிற கொள்கையின் கீழ் நாட்டை கொண்டு வர மத்திய பாஜக அரசு முயன்று வருவதாக தெரிவித்த அவர் , அதன் ஒரு முகம் தான் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் என்றார்.

இது மாநில உரிமைகளை பறிக்க கூடியதாக இருப்பதால் தான் திமுக தொடர்ந்து எதிர்த்து வருவதாக குறிப்பிட்டார்.