தமிழகத்தில் மே 23-க்கு பிறகு  தான் முதல்வராக இருப்போம் என எடப்பாடி பழனிச்சாமி கனவு காண முடியாது என திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்திருக்கிறார்.
தமிழகத்தில் நடந்த 22 தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும்; மே 23-க்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; ஜூன் 3 அன்று  திமுக ஆட்சிக்கு வரும் என்று தேர்தல் பிரசாரம் தோறும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிவருகிறார். இதற்கு பதிலடியாக ஸ்டாலின் முதல்வராவோம் என கனவு காண்கிறார்; அது கனவாகவே இருக்கும். இப்போது மட்டுமல்ல; எப்போதுமே அவரால் முதல்வராக முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி எல்லா அமைச்சர்களும் பேசிவருகிறார்கள்.


இந்நிலையில் ஸ்டாலின் எக்காலத்திலும் முதல்வராக முடியாது என அதிமுகவினரின் விமர்சனம் குறித்து திமுக மகளிரணி செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கனிமொழி, “மு.க. ஸ்டாலின் முதல்வராக கனவுதான் காண முடியும் என எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். இதற்கு முன்பு தான் முதல்வராக ஆகுவோம் என்று அவர் கனவுகூட கண்டிருக்கமாட்டார் என்பதே நிதர்சனம்.
வரும் 23-ம் தேதிக்கு பிறகு மு.க. ஸ்டாலின்தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வராக வருவார். அதன் பின்னர் தாம் முதல்வர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமியால் கனவுகூட காண முடியாது. ஸ்டாலினை விமர்சிக்கிற தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கோ அதிமுகவுக்கோ கொஞ்சமும் இல்லை.” என்று கனிமொழி தெரிவித்தார்.