தமிழகத்தில் புதிதாக வாங்கிய அரசுப் பேருந்துகளில் இந்தி திணிக்கப்பட்டுள்ளதாக அதிமுக அரசுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக 158 கோடி ரூபாய் செலவில் 500 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன. சென்னைக்கு மாநகர போக்குவரத்துக்கு 100 பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 150 பேருந்துகள், விழுப்புரம் கோட்டத்துக்கு 10 பேருந்துகள், சேலம் கோட்டத்துக்கு 20 பேருந்துகள், கோவை கோட்டத்துக்கு 30 பேருந்துகள், கும்பகோணம் கோட்டத்துக்கு 110 பேருந்துகள், மதுரை கோட்டத்துக்கு 50 பேருந்துகள், திருநெல்வேலி கோட்டத்துக்கு 30 பேருந்துகள் என 500 பேருந்துகள் ஒதுக்கப்பட்டன. இந்தப் பேருந்துகளின் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை கோட்டையில் இரு தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
இந்தப் பேருந்துகள் அந்தந்த கோட்டங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுவிட்டன. நவீன வசதியுடன் வாங்கப்பட்டுள்ள இந்தப் பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் சேவையைத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இந்தப் பேருந்துகளில் தமிழ் எழுத்துகளைத் தவிர்த்து இந்தி, ஆங்கில எழுத்துகள் மட்டுமே இடம்பெற்றிருப்பதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இதை திமுக எம்.பி. கனிமொழி தற்போது புகைப்பட ஆதாரங்களுடன் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். 
அந்தப் பதிவில், “தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை.மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால், நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம்.” என்று தெரிவித்துள்ளார். கனிமொழியின் இந்தக் கண்டனத்தை அடுத்து தமிழக அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.