தமிழகம் வளர்ந்த நாடுகளுக்குப் போட்டியாக இருப்பதற்கு திமுக எனும் பேரியக்கமும் கரை வேட்டி கட்டிய கருணாநிதியுமே காரணம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். 
 நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ரூபி மனோகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். திமுக சார்பில் ஐ.பெரியசாமி தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது இக்குழுவில் கனிமொழி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் நாங்குநேரி களக்காட்டில் திமுக தேர்தல் பனிமனை  திறப்பு விழா நடைபெற்றது. பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.


“தேர்தல் அறிவித்ததும், நாங்குநேரி தொகுதியில் 18 தமிழக அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். மக்கள் பிரச்னையைத் தீர்க்க எத்தனை அமைச்சர்கள் இப்படி வந்திருக்கிறார்கள் என கூறமுடியுமா? தமிழ் மரியாதையையும் அதன் தொன்மையையும் மறக்கும் அளவுக்கு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் பெருமையைச் சொல்லக்கூடிய அகழ்வாராய்ச்சியை பாரதத்தின் பெருமையை சொல்லக்கூடிய அகழ்வாராய்ச்சி என அமைச்சர் பாண்டியராஜன் கூறுகிறார். இந்த ஆட்சிக்கு மக்கள் வருகிற தேர்தல் மூலம் மீண்டும் சரியான பாடம் புகட்டுவார்கள்.” என்று கனிமொழி தெரிவித்தார்.
கரை வேட்டிகளை நம்பியிருந்ததால், தமிழகத்தில் கறை படிந்துவிட்டது என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  “அரசியலில்  திடீரென வந்து புதிய கருத்துகளைக் கூறுவோருக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க  முடியாது. தமிழகம் வளர்ந்த நாடுகளுக்கு போட்டியிடும் அளவில் பெருமையோடு இருக்கிறது என்றால், அதற்கு திமுக என்ற பேரியக்கமும், கரை வேட்டி கட்டிய கருணா நியுமே காரணம் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இதை அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்கு புரியும்” என்று கனிமொழி தெரிவித்தார்.