மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட்  பண மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இரு வழக்குகள் தொடர்பாக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் நேற்று அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது கமிஷனரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் போலீசார், சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதையடுத்து மேற்குவங்க முதலமைச்சர்  மம்தா பானர்ஜி நேரடியாக போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு வந்தார். இதைத்தொடர்ந்து அவர் மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தர்ணாவில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

மம்தா பானர்ஜி தொடர்ந்து இன்று 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். போராட்டத்தின் போது அவர் தனது அன்றாட அரசு அலுவலக வேலைகளையும் கவனித்து கொண்டார். இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி  எம்.பி அவரை சந்தித்தார்.

இன்று பிற்பகலில் கொல்கத்தா புறப்பட்டச் சென்ற அவர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மம்தாவுடன் கனிமொழியும் போராட்டத்தில் கலந்து கொள்ளவார் என கூறப்படுகிறது.