திமுக - காங்கிரஸ், கூட்டணியில், பாமகவை சேர்க்க வேண்டும் என, திமுக பொருளாளர், துரைமுருகன் உள்ளிட்ட, வன்னியர் சமுதாய நிர்வாகிகள் விரும்பினர். அதேசமயம், திமுக மகளிர் அணி செயலர், கனிமொழி, முதன்மை செயலர், டிஆர்.பாலு போன்றோருக்கு, பாமகவை சேர்ப்பதில் விருப்பமில்லை. 

இதனால், காங்கிரஸ் கட்சி யின் பரிந்துரையுடன், திமுக கூட்டணியில் சேரும் முயற்சியில், பாமக இறங்கியது. அதனால் தான், அதிமுக - திமுக ஆகிய இரு அணிகளிலும், நாங்கள் கூட்டணி பேச்சு நடத்தி வருகிறோம் என, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பகிரங்கமாக தெரிவித்தார்.

கடந்த, 2004ல், ஐக்கிய முற்போக்கு  கூட்டணி ஆட்சியில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக, அன்புமணி இருந்ததால், காங்கிரஸ் மேலிட தலைவர்கள், அகமது படேல், குலாம்நபி ஆசாத் போன்றோருடன் நட்பு உண்டு. எனவே, அவர்கள் மூலமாகவே, காங்கிரஸ் கூட்டணியில் சேர, அன்புமணி காய் நகர்த்தினார்.

தொகுதி பங்கீடு தொடர்பாக, டெல்லியில், காங்கிரஸ் தலைவர், ராகுல், மேலிட தலைவர்கள், அகமது படேல், முகுல் வாஸ்னிக்கிடம், கனிமொழி, டி.ஆர்.பாலு, ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் பேச்சு நடத்தினர். அப்போது, பாமக வை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும், அக்கட்சிக்கு, 5 தொகுதிகள் கொடுக்கலாம் என்றும், காங்கிரஸ் மேலிட தலைவர்கள், கனிமொழியிடம் கூறிஉள்ளனர். 

இதை விரும்பாத கனிமொழி, சோனியாவின் உதவியை நாடினார். அதன்படி, சோனியாவிடம் பேசிய கனிமொழி, முதல்வர், இபிஎஸ் வறுமையை ஒழிப்பவராக விளங்குகிறார் என, ராமதாஸ் பாராட்டி உள்ளார். எனவே, பாமகவை சேர்த்தால், பொருந்தா கூட்டணியாக மாறி விடும் என தெரிவித்துள்ளார். 

திமுக கூட்டணியில், பாமக இல்லாமல், வட மாவட்டங்களில், 18 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்ற கனிமொழி, மண்டலம் வாரியாக, திமுக - காங்கிரஸ் கூட்டணியின் ஓட்டு சதவீதம் தொடர்பான புள்ளிவிபரங்களையும் எடுத்துக் கூறியுள்ளார். கனிமொழியின் இந்த சொன்னதை ஏற்ற சோனியா, பாமக கூட்டணியை தவிர்க்கும்படி, ராகுலிடம் அறிவுறுத்தினார். அதன்பிறகே, பாமகவை சேர்க்கும் முடிவை, காங்கிரஸ் கைவிட்டது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக காங்கிரஸ் கழட்டி விட்டதை அடுத்தே அதிமுகவோடு பைனல் டீல் பேசி ஓகே ஆனது. ஆனாலும் அன்புமணிக்கு திமுகவோடு இணைந்ததில் விருப்பமே இல்லை என சொல்லப்படுகிறது. ஒப்பந்தம் போட ஹோட்டலுக்கு அதிமுக தலைவர்கள் வந்தபோது அன்புமணி முகத்தை சோகமாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.