’ஆனானப்பட்ட அரசியல் சாணக்கியரான தலைவர் கலைஞரே தன்னோட டெல்லி பிரதிநிதியாக மாறனைத்தான் வெச்சிருந்தார். ஆனால் சுருக்குன்னு கோபப்படுற தளபதிக்கு இந்த டெல்லி அரசியல் சரிப்பட்டு வருமா?’....தி.மு.க.வின் சீனியர் தலைகளுக்குள் நேற்று முதல் நடக்கும் பரபர விவாதம் இதுதான். 

கொல்கத்தாவில், மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி நேற்று நடத்திய கூட்டணி கட்சிகளின் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. சார்பாக ஸ்டாலின் கலந்து கொண்டார். ‘ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்!’ என்று கடந்த மாதம் சென்னையில் நடந்த கூட்டத்தில் ஸ்டாலின் அறிவித்ததற்கு மம்தா, அகிலேஷ் ஆகியோரிடம் இருந்து உடனடியாக கடும் எதிர்ப்பு வந்தது. இதனால் கூட்டணிக்குள் பெரும் குழப்பம் நிகழ்வதாக பேசப்பட்டது. ஆனால், நேற்றைய நிகழ்வுகளின் மூலம் மம்தா மற்றும் ஸ்டாலின் இருவருக்கு இடையிலிருந்த அதிருப்தி பனிப்படலம் நீங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.
 
மேடையில் பேசிய ஸ்டாலின் மம்தாவை பெருமையாக புகழ்ந்தார். அவரைப் பார்த்து மோடி பயப்படுகிறார் என்று சொன்னதன் மூலம் மம்தாவின் மனதில் ஸ்டாலின் அழுத்தமாக பதிந்திருக்கிறார். இந்த பெரும் விழாவில் ‘கூட்டணி தலைவர்கள் நாம் இன்னும் சில மாதங்களுக்கு டெல்லியிலும், அனைத்து மாநிலங்களிலும் அடிக்கடி சந்திப்போம்!’ என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதை கூட்டணி தலைவர்கள் ரசித்தாலும் கூட, தி.மு.க.வோ அதிர்ந்திருக்கிறது. காரணம்?....கழக தலைவராக விஸ்வரூபமெடுத்துவிட்ட ஸ்டாலின் டெல்லியிலும் தன்னையே முன்னிலைப்படுத்திக் கொள்வது எந்தளவுக்கு வெற்றிகரமாக கைகொடுக்கும்? எனும் சந்தேகம்தான். 

நேற்றிலிருந்து தி.மு.க.வின் சீனியர் தலைகளுக்குள் இதுதான் பெரும் விவாதமாக போய்க் கொண்டிருக்கிறது. இதுபற்றி முக்கிய நிர்வாகிகளிடம் நாம் பேசியபோது “ஆனானப்பட்ட தலைவர் கலைஞரே முரசொலி மாறனை தனது டெல்லி முகமாக நிறுத்தியிருந்தார். ஆனால் தளபதியாரின் முடிவோ வேறு கோணத்தில் இருக்கிறது. தமிழகமும் நானே! டெல்லியும் நானே! தி.மு.க. என்றால் நான் மட்டுமே! என்று ஜெயலலிதா பாணியில் கட்சியை நடத்த துவங்கிவிட்டார். இது சரியா என புரியவில்லை. 

மாறன் மறைவுக்குப் பின் அவரது மகன் தயாநிதி மாறனை டெல்லிக்கு அனுப்பி ஒரு அதிகார மையமாக உருவாக்க முயன்றார் கருணாநிதி. அதற்கு ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் மெளன எதிர்ப்பை காட்டினர். அவர்கள் நினைத்தது போலவே தயாநிதி மாறன் தன்னையும், தன் அண்ணனின் பிஸ்னஸையும்தான் டெல்லி லாபி மூலம் வளர்த்தாரே தவிர கட்சிக்கு பயனை கொண்டு வரவில்லை. அந்த தயாநிதி மாறனை இன்று டெல்லி விஷயங்களில் ஸ்டாலின் ஒதுக்கி வைப்பது தவறில்லை என முக்கிய தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் சொந்த தங்கையான கனிமொழியையும் ஒதுக்கி வைப்பதுதான் அதிர்ச்சியை தருகிறது. என்னதான் ராஜ்யசபா மூலம் டெல்லிக்கு பைபாஸில் கனி சென்றிருந்தாலும் கூட அவரது நாடாளுமன்ற நடவடிக்கைகள் பெருமிதப்படக்கூடியவையே! தமிழகத்தின் மிக முக்கிய பிரச்னைகள் பற்றி பெரிதாய் முழங்கி மைய அரசின் கவனத்தை தமிழகம் நோக்கி ஈர்த்தவர், இழுத்தவர். அவருக்கென்று வட இந்தியாவில் ஒரு நல்ல அறிமுகம் இருக்கத்தான் செய்கிறது. அப்பேர்ப்பட்ட கனியையும் ஒதுக்கிவிட்டு தலைவர் ஸ்டாலின் தானே போய் நிற்பேன் என்பதுதான் நெருடல்.

 

தளபதி சற்றே முன்கோபி, சுருக்கென்று அதிருப்தியாகிடுவார், முகத்தைக் காட்டிவிடுவார். வட இந்திய அரசியல் என்பது கத்தி மேல் நடப்பது போல. அதுவும் தென்னிந்திய தலைவர்களை அவர்கள் ட்ரீட் செய்யும் ஸ்டைலே பெரிய சிக்கலாய் இருக்கும். இதெல்லாம் ஸ்டாலினுக்கு ஒத்துவருமா என்பதே  எங்களின் சந்தேகம்! ஹெவி வெயிட்டான இந்த டெல்லி அரசியலை தளபதி தாங்குவாரா?ன்னு புரியலை. அவர் மிகப்பெரிய அரசியல் அனுபவசாலிதான் அதில் மாற்றுக் கருத்தில்லை. 

ஆனால் டெல்லி அரசியலின் போக்கு வேறு லெவலானதே! தமிழகத்தில் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக அவர் செய்து முடிக்கவேண்டிய பணி ஏராளம் இருக்கையில், டெல்லியிலும் நானே கவனம் செலுத்துவேன் என்று விடாப்பிடியாய் ஸ்வெட்டர் போட்டபடி நிற்பது கட்சியை சிக்கலில் தள்ளிவிடாமல் விடாது என்றே தெரிகிறது.” என்கிறார்கள். கொஞ்சம் கவனிங்க தளபதி!