கொரோனா ஊரடங்கு காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தூத்துக்குடி தொகுதியில் உள்ள அத்தைக்கொண்டான் பகுதியில் திமுக எம்.பி. கனிமொழி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைக் கனிமொழி சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதை திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நீட் தேர்வு தமிழக மாணவர்களைப் பாதிக்கக்கூடிய ஒரு தேர்வாக உள்ளது. நீட் தேர்வுக்கு பயந்து இந்த வருடம் கூட ஒரு மாணவி தற்கொலை செய்து இறந்துள்ளார். நீட் தேர்வால் இப்படி எத்தனையோ உயிர்களை இழந்திருக்கிறோம்.
நீட் தேர்வு கூடவே கூடாது வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தமிழக அரசு எக்காரணம் கொண்டும் நீட் தேர்வை ஏற்கக் கூடாது. நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அது மக்களுக்கு தமிழக அரசு செய்யக்கூடிய மிகப்பெரிய தூரோகமாக அமைந்துவிடும். கொரோனா விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் மிகத் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கியிருக்கிறது. கொரோனா பாதிப்பில் இந்தியாவில் தமிழகம் மோசமான சூழ்நிலையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.


இந்த விவகாரத்தில் பல குளறுபடிகள், குழப்பங்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைப்பது என பலாற்றை பார்க்கிறோம். எந்தவிதமான தெளிவுமின்றி மத்திய அரசு ஒரு முடிவை அறிவிக்கிறது. மாநில அரசு இன்னொரு முடிவை எடுக்கிறது. ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலம் செல்லலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. இதன் பிறகும் ஊரடங்கை கொண்டுவருவதில் என்ன அர்த்தம் இருக்கப் போகிறது? இது பல்வேறு பிரச்னைகளை உருவாக்கவே வழிவகுக்கும். லஞ்சம் வாங்கவும் வழிவகுக்கும். இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது” என கனிமொழி தெரிவித்தார்.