காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு ஆதரவாக திமுக எம்.பி. கனிமொழி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்கள்.
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை பாஜகவைச் சேர்ந்த மாநில நிர்வாகி கரு. நாகராஜன், ‘கேவலாமன பெண்’ என்று விமர்சித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், சோஷியல் மீடியாவில் காங்கிரஸ் கட்சியினரும் திமுகவினரும்  ‘#I_Stand_with_Jothimani’ என்ற ஹாஷ்டேக்கை பயன்படுத்தி கருத்திட்டுவருகிறார்கள். இதேபோல கரு. நாகராஜனுக்கு ஆதரவளிக்கும் வகையில் பாஜகவினரும் ‘#WestandbyNagarajan’ பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் திமுக எம்.பி.யும் கட்சியின் மகளிரணி தலைவருமான கனிமொழி ட்விட்டரில் கரு. நாகராஜனை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில், “தரம் கெட்டவர்கள்தான் மனிதர்களையும் பெண்களையும் தரம் பிரிப்பார்கள். தன் கீழ்த்தரமான குணத்தைக் காட்டிவிட்டார் பிஜேபியை சேர்ந்த கரு.நாகராஜன். #I_Stand_with_Jothimani” என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதேபோல திமுக இளைஞரணி செயலாளரும் ட்விட்டரில் இந்த விவகாரம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “அவரின் கேவலமான வார்த்தைகளைக் கேட்டு கடுங்கோபத்துடன் இருந்த நான், ‘அமைதியா இருங்க. பொறுப்பான கட்சியின் மூத்த தலைவர் நீங்களே இப்படிப் பேசலாமா’ என்று நெறியாளர் சொன்னபோது என்னையறியாமல் சிரித்துவிட்டேன். பொறுப்பான கட்சி, மூத்த தலைவர்… குட் காம்பினேஷன்! #I_Stand_With_Jothimani” என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.