சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து கேரளாவில் உள்ள பினராயி விஜயன் தலைமையிலான இடது சாரி அரசு உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
 
இதையடுத்து, அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற இளம் பெண்களை, பக்தர்கள் தடுத்து, திருப்பி அனுப்பினர். ஆனாலும் , பிந்து, கனகதுர்கா,  என்ற இரு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் கோவிலுக்குள் சென்று, தரிசனம் செய்தனர். இது பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதில் கனகதுர்கா, தரிசனம் முடிந்த ஒரு வாரத்துக்கு பின், மலப்புரத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை, மாமியார், கட்டையால் அடித்து விரட்டினார். இதையடுத்து, தன்னை வீட்டிற்குள் அனுமதிக்க உத்தரவிடக்கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், கனகதுர்காவை போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்து செல்ல, நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி நேற்று அவர், கணவர் வீட்டுக்குச் சென்றார். ஆனால் முன்னதாகவே, கணவர் கிருஷ்ணன் மற்றும் குழந்தைகள், வீட்டை பூட்டிச் சென்று விட்டனர். இதையடுத்து போலீசார், கதவை உடைத்து, கனகதுர்காவை உள்ளே அனுப்பினர். அனைத்து பிரச்னைகளுக்கும் சுமுக தீர்வு ஏற்படும் என நம்புவதாக, கனக துர்கா கூறினார்.