சென்னை உள்நாட்டு முனையத்தில் காமராஜர் பெயர் பலகை அகற்றப் பட்டுள்ளது அவரது பெயர் மற்றும் உருவம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உள்நாட்டு விமான முனையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் பலகையை உடனடியாக வைக்க வேண்டும் என வலியுறுத்தி நாடார் சங்கங்கள் சார்பில் இன்று சென்னை விமான நிலையம் முற்றுகை போராட்டம் நடந்தது. தங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் மே 20ஆம் தேதி நாடார் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளை இணைத்து மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேசு எச்சரித்துள்ளார்.

தென்னிந்தியாவில் சென்னை விமான நிலையம் வெளிநாட்டினர் வந்து செல்லும் மையமாக இருந்து வருகிறது. நாளொன்றுக்கு ஆயிரக் காணக்கான மக்கள் சென்னை விமான நிலையம் வந்து செல்கின்றனர். 1890ம் ஆண்டு விபி சிங் பிரதமராக இருந்தபோது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்நாட்டு முனையம், வெளிநாட்டு முடியுமென உருவாக்கப்பட்டது. விமான நிலையத்தை திறந்து வைத்த வி.பி சிங்கிடம் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி வைத்த கோரிக்கையை ஏற்று உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயர் வைக்கப்பட்டது. அதேபோல் பன்னாட்டு விமான முனையத்திற்கு அண்ணா பன்னாட்டு விமான நிலையம் என பெயர் சூட்டப்பட்டது.

ஆனால் தற்போது அங்கு காமராஜர் பெயரும் இல்லை, அண்ணாவின் பெயரும் இல்லை. எனவே சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட வேண்டும் என நாடார் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில்தான் நாடார் சங்கங்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து விமான நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளரிடம் பேசிய பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர் தனபாலன், மீண்டும் உள்நாட்டு விமான முனையத்திற்கு காமராஜர் பெயர் வைப்பது தொடர்பாக பலமுறை நாடார் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளோம். விமானநிலையம் விரிவாக்கம் முடிந்தபிறகு காமராஜரின் பெயரை சூட்டுவதாக சென்னை விமான நிலைய ஏர்போர்ட் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவே உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயர் பலகை மற்றும் திருவுருவச் சிலை வைக்கவேண்டும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பெயர்ப்பலகை திருவுருவச் சிலை வைக்க வேண்டும் என கோரினார்.

அவரை தொடர்ந்து பேசிய தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேசு, சென்னை உள்நாட்டு முனையத்தில் காமராஜர் பெயர் பலகை அகற்றப் பட்டுள்ளது அவரது பெயர் மற்றும் உருவம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய அறிவிப்புகளில் அவருடைய பெயர் அறிவிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக பிரதமருக்கு இப்போதே கோரிக்கை வைக்கிறோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும், அதே போல் விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் காமராஜர் பெயர் சூட்டப்பட வேண்டும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் நாடார் சங்கங்களையும், அரசியல் கட்சிகளையும் இணைத்து மே 20ஆம் தேதி மிகப் பெரிய உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவோம் என எச்சரித்தனர்.