கமல் கட்சியின் கொள்கை என்ன, மக்கள் ஆதரவு எப்படி இருக்கும் அரசியல் தலைகள் கடந்த சில நாட்களாகவே குழப்பத்தில் இருந்தனர். நேற்று முன்தினம் காலை முதல் அவரது அரசியல் பிரவேசம் குறித்து மாநிலக் கட்சிகள் முதல் தேசியக் கட்சிகள் வரை கடுமையாக விமர்சித்தது.

தமிழகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்களைத் தன்னைச் சுற்றி வைத்திருக்கும் கமல் அவர்கள் வடிவமைத்துக் கொடுத்த பயணத் திட்டத்தில் காலை முதல் ஒத்தக்கடை மேடையேறும் வரை சரியாகவே பயணத்தை தொடங்கினார். தனது முதல் அரசியல் உரையை எந்த வித குறிப்புகளுமின்றித் தொடங்கியபோது மிகச் சிறந்த அரசியல்வாதியாகப் பக்குவப்பட்ட பாணியில் பேசத் தொடங்கினார்.

இதைத் தொலைக்காட்சி நேரலையில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பார்த்திருப்பார்கள். அப்போதே சில பழுத்த பழங்களுக்கு கொஞ்சம் பீதியை கிளப்பினார். பொதுவாக கமல் பேசும் மொழிநடை பிறருக்குப் புரியாது என்பது பத்திரிகையாளர்கள் அடிக்கும் கமெண்ட்.

வழக்கமான தனது பேச்சுநடையைப் பாமர மொழிக்கு மாற்றித் தரமான கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு பற்றி சரளமாகப் பேசிய கமல், கழுவுற மீனில் நழுவிய மீனாகத் தனது கட்சியின் அரசியல் நிலைபாட்டை, கொள்கை என்ன என்பதை இறுதி வரை சொல்லவே இல்லை, அதுதான் மாஸ்டர் ஸ்டோக். ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் எதை செய்ய தவறினார்களோ அதுதான் எனது கொள்கை என தெளிவாக சொன்னார்.

கலைஞர் கருணாநிதியுடன் நெருக்கமான பழக்கத்தில் இருந்தவர் கமல். அவரிடமிருந்து தமிழைக் கற்றுக்கொண்டதாகக் கூறுவார். கேள்வியிலேயே துணைக் கேள்வியை உருவாக்கி பதில் கூறுவது கருணாநிதியின் பாணி. அதேபோல பொதுக்கூட்ட மேடையில் மக்கள் கேட்ட கேள்வி எனப் படித்த அனைத்துக்கும் அதில் இருந்தே கேள்வியை உருவாக்கி பதிலாகக் கூறினார்.

தமிழக அரசியல்வாதிகளைப் பெயர் குறிப்பிடாமல், கடுமையாக விமர்சிக்காமல் அதே நேரம் “நீங்கள் ஒழுங்காக மக்களுக்கான தேவைகளைச் செய்திருந்தால் நான் வந்திருக்க மாட்டேன்” என்று வஞ்சப்புகழ்ச்சி வாசித்த கமல், “இப்போதும்கூட எல்லாம் செய்துவிட்டீர்கள் என்றால் நாங்கள் போய்விடுவோம்” என்று நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி கர்ஜித்தார்.

கமல்ஹாசனின் அரசியல் கட்சியின் முதல் பேச்சை கேட்க வந்த  அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பேச்சி கேட்டதும் தொண்டர்களாகவே மாறிவிட்டனர். அவர் பேசும் தமிழ் மிகவும் நன்றாக இருக்கிறது. கருணாநிதிக்கு பிறகு தமிழை நன்றாக பேசும் ஒரே அரசியல்வாதி இவர்தான் என சமூக வலை தளங்கள் முழுவதும் இதே பேச்சு தான்.

இவர் பேசுவது,  அரசியல்வாதிகள் பேசுவதைப்போல தெரியவில்லை. மாறாக அவரது உள்ளத்தில் இருந்து பேசுகிறார். ஆனால் அரசியல் யதார்த்தம் வேறு மாதிரியாக இருக்கிறது. ஓட்டுக்கு பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பவர்கள் அதில் இருந்து மீள்வார்களா? என்று தெரியவில்லை என கூட்டத்திருக்கு வந்தவர்களின் முணுமுணுப்பாக இருந்தது.

கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு பிறகு சிறந்த தேர்வு கமல்ஹாசன்தான். ஊழலுக்கு எதிராக களம் இறங்கி கமலுக்கு தான் எங்களது ஓட்டு என 18 வயதான முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வமாக உள்ளர்களாம். ஏனென்றால் கமல்ஹாசன் சிறந்த தலைவராக உருவாகி உள்ளார்.

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று அவர் பேசியது என்னை வெகுவாக கவர்ந்தது. என்னதான் மக்களுக்கு புரியாமல் தனது தூய தமிழில் குழப்பினாலும் பாமரணனும் புரியும் வகையில் பேசியிருப்பது தமிழக மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் அச்சம் கலந்த அதிர்ச்சி தான்.

அதேபோல, அவர் பேசியதை தொலைகாட்சிகளில் பார்த்த மக்கள் வியப்பானது என்னன்னா? அமைதி காக்க. . களத்தில் இறங்கியாச்சு. பகைவர்களை விரட்ட வேண்டாம். தானாகவே முன்வந்து அடங்குவர் என்ற தெளிவான பேச்சு. அடுத்ததாக எழுதியதை படிக்கும் கலாச்சாரம் மாறியது.  பதில் உடனே. யார் மனதையும் புண்படுத்தாமல் பேசியது, தமிழின் உச்சரிப்பு. உவகையை வியக்க வைக்கிறது.

குண்டக்க மண்டக்க பேசி எப்படியாவது கைதட்டல் வாங்கிடுற ஆள் தான், பல கெட்டப் போட்டு ஆச்சர்யப்படுத்துற ஆள் தான் இருந்தாலும் நேத்து மீட்டிங்க்ல பல இடங்கள்ல ஜர்க் ஆகிட்டாரு. நல்ல நடிகன்னாலும் லைவ்ல வரும் போது சில சறுக்கல்கள் வரத் தானே செய்யும். இவராவது பரவாயில்லை.

இன்னும் கொஞ்ச நாள்ல இன்னொருத்தர் வாறேன்னு சொல்லிருக்காரே அவரை நினைச்சா தான் பாவமா இருக்கு. ராமேஸ்வரத்துல ஆரம்பிச்சதால மீடியாவும் ஒன் டே மேட்ச் மாதிரி நேத்து ஃபுல்லா இதை வச்சே ஓட்டிட்டாங்க. அவரு இமயமலையில இருந்து தான் ஆரம்பிப்பேன்னு சொல்லிட்டார்ன்னா மீடியா டெஸ்ட் மேட்ச் மாதிரி அஞ்சு நாள் ஓட்டுவாங்க.

நமக்கு பொழுது போனா சரி தான். அப்புறம் கமல் கட்சியை ஆரம்பிச்ச உடனே பொறுப்பான பிள்ளையா அமைச்சர்கள் விமர்சனத்தை காது கொடுத்து கேட்பேன்னு சொல்லிருக்காரு. அதுலாம் பெரிய விஷயம் இல்ல ஆண்டவரே.. இனி மேல் தான் நீங்க ரொம்ப கவனமா இருக்கனும். முக்கியமான பல பேரை நீங்க எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அது வேற யாரும் இல்ல, நம்ம மீம் கிரியேட்டர்ஸ் தான். வித்தியாசமா டிரை பண்றேன்னு ஏடாகூடமா பேசி மாட்டிக்காதீங்க, பாவம் பரிதாபம் பார்க்காம மீம் போட்டு சாவடிப்பாங்க கொஞ்சம் உஷாரா இருங்க என வலைதளங்களில் கமலுக்கு சில அறிவுரைகளும் வந்துகொண்டே தான் இருக்கிறது.

மிகச் சிறந்த திரைக்கதையில் கிளைமாக்சில் கதையாசிரியர்  ஆடியஸ்க்கு டிவிஸ்ட் வைப்பதைப்போல “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் அரசியல் பொருளாதாரக் கொள்கை என்ன என்பதை அறிய தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.