தமது கட்சியின் கொடி லோகோவை இனி காப்பி என்றும் யாரும் சொல்லமுடியாத வகையில் கட்சியின் சின்னம் மும்பை தமிழ் பாசறையிடம் இருந்து முறைப்படி பெறப்பட்டது என  மக்கள் நீதி மய்யத்தின் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

நடிகர் கமல் ஹாசன், தனது அரசியல் பிரவேசத்தை  ராமேஸ்வரத்தில் இருந்து துவங்கினார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை துவக்கிய கமல், கட்சியின் பெயரையும் கொடியையும் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்தார். 

தனது கட்சியின் பெயராக, மக்கள் நீதி மையம் என்றும்,  ஒன்றிணைந்த 6 கைகளோடு நடுவில் நட்சத்திரத்துடன் தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். அந்த கொடியில் சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்கள் இடம் பெற்றிருந்தன.

இதையடுத்து இணைந்த கரங்கள் போன்ற சின்னம் ஏற்கனவே உள்ளது. தபால் ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு (NFPE) மற்றும் தமிழர் பாசறை போன்ற அமைப்புகள் அந்த லோகோவை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இடது கைகள் இணைந்துள்ள நிலையில் அந்த லோகோ இருந்தது. 

ஆனால் கமல் ஹாசனின் கட்சி கொடியில், வலது கரங்கள் இணைந்த நிலையில் சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே இருந்த சின்னத்தில் இருந்துதான் கமல், காப்பி அடித்துள்ளார் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். அதேபோல் வலைத்தளங்களிலும் இதேபோன்று விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல், தமது கட்சியின் கொடி லோகோவை இனி காப்பி என்றும் யாரும் சொல்லமுடியாத வகையில் கட்சியின் சின்னம் மும்பை தமிழ் பாசறையிடம் இருந்து முறைப்படி பெறப்பட்டது என  தெரிவித்தார்.