’மிரட்டப்பட்டார் நம்மவர்!’ -மக்கள் நீதி மய்ய தலைமை நிர்வாகிகளுக்குள் நேற்று இரவு முதல் ஓடும் பெரும் பரபரப்பு இதுதான். சமீபத்திய பேட்டிகளில் தங்களை மிகவும் மோசமாக கமல்ஹாசன் விமர்சிப்பதால், அவரை இரு கட்சிகளுமே தனித்தனியாக சில தரகர்களை வைத்து மிரட்டியிருக்கின்றன என்கிறார்கள். தி.மு.க. எம்.எல்.ஏ.வும், நடிகருமான வாகை சந்திரசேகரின்  அறிக்கையின் அனலை அரசியலரங்கம் அதிர்ச்சியாய் பார்க்கிறது. மனிதர் கமலை வெச்சு செஞ்சிருக்கிறார் தன் வார்த்தைகளில். அதன் ஹைலைட் பாயிண்டுகள்... 

* தனக்கான விளம்பரம் தேடிக் கொள்ள தி.மு.க.வை நோக்கி விமர்சனம் செய்வதென்பது கமலின் அரைவேக்காட்டுத்தனம். 

* அடிமைத்தனமும், அவலட்சணமும் கொண்ட அ.தி.மு.க. ஆட்சியை விமர்சிக்கும் நேரத்திலும், அதற்கு சரிசமமாக தி.மு.க. மீது விமர்சனம் செய்வதன் மூலம் தன்னை நடுநிலைவாதியாக காட்டிக் கொள்ள நினைப்பது அரத பழைய டெக்னிக்.

* ஊழலின் மொத்த உருவமான ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை வாய் திறக்க வக்கில்லாதவர் கமல். 

* கறுப்பா, காவியா, கறுப்புக்குள் காவியா என்று தன் நிலை என்னவென்று தனக்கே தெரியாமல் குழம்புகிறார். 

* இதுதான் என் கடைசிப்படம்! என்று சீன் போட்டவர் இப்போது அதை காப்பாற்றாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார். தான் கொடுத்த முதல் பர்ஷனல் வாக்குறுதியையே காப்பாற்ற முடியாவர். 

* தி.மு.க.வை பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?

* வெற்றிடம் என நம்பி வந்து வீணாய்ப் போனவர், விரக்தியின் உச்சத்தில் நிதானம் தவறிப்பேசுகிறார். 

* அவதூறு சேற்றை அள்ளி தன் முகத்தில் பூசிக்கொண்டு புது மேக் - அப் போடுகிறார். என்று போட்டுப் பொளபொளவென பொளந்துவிட்டார் மனிதர். இதை கமல்ஹாசனுக்கு எதிரான கடுமையான மிரட்டலாகவே பார்க்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஸ்டாலினுக்கான வழக்கறிஞர் போல் வாகை சந்திரசேகர் இப்படி கொதித்திருக்க என்ன அவசியம்? முழுக்க முழுக்க ஸ்டாலினின் தூண்டுதலில், பூச்சிமுருகன் போட்டுக் கொடுத்த ஸ்கெட்சின்படி இந்த ஆவேசத்தை வாகை நடத்தியிருக்கிறார் என்கிறார்கள். 

தி.மு.க.வை விமர்சித்த கமலுக்கு, ஸ்டாலினே நேரடியாக பதில் சொல்லியிருக்கலாம்! என்பவர்கள், இன்னொரு பகீர் விஷயத்தையும் சொல்கிறார்கள். அதாவது அ.தி.மு.க.வுக்கு எதிராக கமல் அத்துமீறிப் பேசுவதாக அக்கட்சி நினைக்கிறதாம். பிரதமர் மோடிக்கு எதிராக ஓப்பனாய் பேசிடாத கமல், முதல்வர் எடப்பாடியாரை மட்டும் ஓவராய் இழுப்பதாய் கடுப்பாகிறார்கள். இதன் வெளிப்பாடாக, நேற்று இரவில் கமலுக்கு ஒரு மிரட்டல் தொனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.  

அதில்...”வரம்பு மீறி போயிட்டிருக்க. எடுத்ததுக்கெல்லாம் ஆளுங்கட்சியை சீண்டிட்டே இருக்கணும்னு நினைச்சேன்னா அவ்வளவுதான். சொந்த வாழ்க்கையில மனசும், உடம்பும் சுத்தமில்லாத நீ எப்படி ஊழலை பற்றிப் பேசுற. அடக்கமா இரு!” என்று வழக்கமாக கட்சி நிர்வாகிகளும், மீடியாக்களும் கமல்ஹாசனை தொடர்பு கொள்ள உதவும் எண் மூலமாக இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்கிறார்கள். ஆனால் கமல் இதற்கு அலட்டிக்கவேயில்லை, ‘இதையெல்லாம் கண்டுக்காதீங்க. நம்மை விமர்சிக்க இங்கே எவனுக்கும் ’சுத்த தகுதி’ இல்லை.’ என்று தன் நிர்வாகிகளை சமாதானம் செய்தாராம்.