கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களிலிருந்து ஏராளமான கூலித்தொழிலாளர்கள் வாழ வழியின்றி வேறு வழியில்லாமல், நூற்றுக்கணக்கான கி.மீ. தூரத்தை நடந்து தங்கள் வீட்டை அடைய முயற்சி செய்துவருகிறார்கள். இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் இந்த நிலை பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அதை சொல்லும் வகையில்  நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கவிதை ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


 “வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்?
ஏழ்மை கற்பிக்காததை இறைவனா கற்பிப்பான்?
ரோகம் கற்பிக்காததை மோகமா கற்பிக்கும்?
தாகம் கற்பிக்காததை தடாகமா கற்பிக்கும்?
வாழ்...
ஏழ்மை இழிவன்று
அது செல்வத்தின் முதல் படி.
தாகத்துடன் நட, தடாகம் தென்படும்.
மோகமும்,சாவதும், இறைவனும் இன்றியமையாததன்று.
போவதும், வருவதும் போக்குவரத்தன்றி
வேறென்ன சொல்லு
தோழா/ தோழி
உங்கள் நான்
கமல் ஹாசன்.”


இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் கமல்ஹாசன் கவிதை வெளியிட்டுள்ளார். இந்தக் கவிதைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் அவருடைய பக்கத்தில் கருத்திட்டுவருகிறார்கள்.