’சமுத்திரம் பெரிதா, தேன் துளி பெரிதா? தேன்தான் அது நான் தான்!’ என்று தனது தனித்துவத்தை தரமாக சினிமாவில் பதிவு செய்தவர் கமல்ஹாசன். அதனினும் சிறப்பாக அரசியலில் சாதிப்பார்! என்று நினைத்தால்...அய்யோ பாவமாக சரிந்து கொண்டே இருக்கிறார் பாவம். 

’கட்சி செலவுக்காக மக்களிடமிருந்து நன்கொடை எதிர்பார்க்கிறேன்! என் கட்சியில் இல்லாத நபர்களும் கூட சீட் கேட்டு விண்ணப்பம் செய்யலாம்!’ என்றெல்லாம் கமலின் தனித்துவ அரசியல் தடம் மாறும் போது அந்த கலைஞனை பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள் அவரது சினிமா நேயர்கள். 

இந்நிலையில், ’கமலின் நோக்கம் தீவிர அரசியல் அல்ல. தன்னால் எந்த காலத்திலும் ஆளும் நிலைக்கு வரமுடியாது! என்று அவருக்கு தேரியும். அவர் பா.ஜ.க.வின் ‘பி’டீம் தான். தி.மு.க.வுக்கு செல்லும் அ.தி.மு.க.வின் நாத்திக ஓட்டுக்களை சிதறடிப்பதே கமலின் நோக்கம். மோடி கொடுத்திருக்கும் இந்த அஸென்மெண்டுடன் அரசியலுக்குள் வந்திருப்பவர், ஆன் தி வேயில் பணத்தையும் வசூல் செய்து வளமாக அள்ளிக் கொண்டிருக்கிறார்.’ என்று மிக கடுமையான விமர்சனமொன்று அவர் மீது வைக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து வாய் திறந்திருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் வி.ஐ.பி. உறுப்பினரும், கமல்ஹாசனின் நண்பருமான கவிஞர் சிநேகன் “கமலுக்கு தேவை பணம்தான்! அதை வளமாக வசூல் செய்துவிட்டு, இந்த தேர்தலில் தோல்வி ரிசல்ட் வந்ததும் அப்படியே கட்சியை மெது, மெதுவாக கரைத்துவிடுவார்! என்று எங்கள் மீது விமர்சனம் வைப்பவர்கள் இன்னும் நெடுங்காலம் வாழ வேண்டும். காரணம், அப்போதுதானே நாங்கள் இனி பல தேர்தல்களை எதிர்கொள்ளப்போவதை அவர்களால் பார்க்க முடியும். 

அதேபோல், கமல்ஹாசனை பா.ஜ.க.வின் ‘பி டீம்’ என்று சொல்வதை உலகத்திலேயே மிகப்பெரிய கெட்டவார்த்தையாக பார்க்கிறோம். ஸ்மிருதி இராணியுடனான விவாதத்தின் போது என்ன மாதிரியான சூழல் இருந்தது என்று நமக்கு தெரியாது, இதை நம்மவர்தான் விளக்க வேண்டும். ஆனால் அவரை இப்படி அந்த கட்சியின் பி டீம் என்று சொல்வதை சத்தியமாக சகித்துக் கொள்ளமுடியவில்லை.” என்று தன் முடியை கோதியிருக்கிறார்.