தமிழர்கள் ஒவ்வொருவரையும் கடனாளியாக மாற்றிய ஒன்றுதான் திமுக, அதிமுக அரசுகளின் சாதனை என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் முழுமையான கடைசி பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் கட்சியினர் வரவேற்றும் விமர்சித்தும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் விமர்சனம் செய்துள்ளார்.


அவருடைய பதிவில், “தமிழ்நாட்டின் தமிழ் மக்களின் வளங்களை வாரிச்சுருட்டி செல்வது போல் உள்ளது பட்ஜெட். திமுக மற்றும் அதிமுக அரசு கடைப்பிடித்த நிதி நிர்வாகத்தால் தமிழகத்தின் ஆண், பெண் குழந்தைகள் மற்றும் இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகள் என ஒவ்வொருவரின் தலையிலும் சுமார் 57,000 ரூபாய் கடன் சுமை, இன்றைய தேதிவரை ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.  தமிழர்கள் ஒவ்வொருவரையும் கடனாளியாக மாற்றிய ஒன்று தான் இந்த இரு அரசுகளின் சாதனை.


நிதி ஆதாரத்தை பற்றிய எவ்வித கவலையும் இல்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது அதிமுக அரசு. திமுக மற்றும் அதிமுக அரசுகள் கடைபிடித்த தவறான பொருளாதார கொள்கைகளால் தான் ஒவ்வொரு தமிழரும் கடனாளியாக்கப்பட்டுள்ளனர். இவர்களை அகற்றுவோம். தமிழக வருமானத்தைக் கூட்டுவோம். கடனில்லாத் தமிழகத்தை உருவாக்குவோம்.  மக்கள் கைகோர்த்தால் நீதி கிடைக்கும்.” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.