Asianet News TamilAsianet News Tamil

அரசியலுக்கு அச்சாரம்... மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யும் கமல்...! 

kamalhasan in new route to begin his political entry by mass meeting
kamalhasan in new route to begin his political entry by mass meeting
Author
First Published Nov 2, 2017, 1:23 PM IST


அரசியல் களத்தில் இறங்குவது என்ற தீர்மானத்தில் முழு மூச்சில் ஏற்பாடுகளைச் செய்து வருகிறார் கமல். அவரது அண்மைக் கால நடவடிக்கைகள், அரசியல்  சார்ந்ததாக, மாநிலத்தில் ஆளும் கட்சியை விமர்சிப்பதாக, மத்தியில் ஆள்பவர்களை சீண்டுவதாகவே அமைந்திருக்கிறது. 

கேரளத்துக்குப் போனார். முதல்வர் பிணரயி விஜயனை சந்தித்தார். அரசியல் பாடம் படிக்கப் போவதாகச் சொன்னார். எல்லாம் பழைய கதை. இப்போது, அவர் முன்னோட்டமாக ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தப் போகிறாராம். பொதுவாக, கட்சிகள் தொடங்குவதெல்லாம் திருச்சியை மையப் படுத்தியே இருக்கும். பெரும் கூட்டங்களாகட்டும், அறிமுகக் கூட்டங்களாகட்டும் எல்லாம் திருச்சியை மையம் கொண்டிருந்தபோது, கமல் தேர்ந்தெடுத்திருப்பது மதுரையை என்கிறார்கள் அவரது நற்பணி இயக்கத்தினர். 

அதைத்  தொடர்ந்து, மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் கமல்ஹாசன் என்று செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.  இந்தக் கூட்டத்தில்,  தனது நற்பணி மன்ற இயக்கத்தினர் இதுவரை செய்த பல சேவைகள், இனிமேல் செய்யப் போகும் பணிகள் குறித்து அவர் பேசவிருக்கிறாராம்.  அதற்காக, தனது நற்பணி மன்ற நிர்வாகிகள், ரசிகர்களிடம் இருந்து அதற்கான விவரங்களைக் கேட்டு வருகிறாராம். 

கமல் ஹாசனின் சொந்த ஊர் பரமக்குடி. மதுரைக்கு அருகே ராமேஸ்வரம் செல்லும் சலையில் உள்ளது. எனவே மதுரையை மையமாகக் கொண்டு அவரது அரசியல் பிரவேசத்தையும் தொடங்கிவிட்டார் என்கிறார்கள். அரசியலை பொறுத்தவரை பல திருப்புமுனைகளை உண்டாக்கியது மதுரை.

சொந்த ஊர் அருகே என்பதால், கமலுக்கு நெருங்கிய நண்பர்கள் பலர் இருக்கும் இடமும் இதுதான். எனவேதான் இங்கிருந்தே தனது பொதுக்கூட்ட அரங்கேற்றத்தை நடத்த கமல் திட்டமிட்டிருக்கிறாராம். இதுகுறித்த அறிவிப்பை கமல் தனது பிறந்த நாளுக்குப் பின்னர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறார்கள். 

ஏற்கெனவே, ஊடக அழுத்தத்தின் காரணமாக அரசியல் கட்சியின் பெயரை எல்லாம் அறிவிக்க முடியாது என்று தெளிவாகக் கூறிவிட்டார் கமல். எனவே அவரது பிறந்த நாளில் கட்சி அறிவிப்பு குறித்து எதிர்பார்க்க இயலாது என்கிறார்கள். 

முன்னதாக, திருச்சியில் தமிழருவி மணியன் தனது காந்திய மக்கள்  இயக்கத்தின் சார்பில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினார். அதில், பெருமளவிலான ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டு, ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தனர். ஆனால் அவரோ 2.0 என்று கனவுலகத்திலேயே நின்றுவிட்டார். இன்னொருவரான கமல் இப்போது திடீரென களத்தில் இறங்க திட்டமிட்டிருக்கிறார். எல்லாம் மதுரை சொக்கநாதர்தான் முடிவு செய்ய வேண்டும்!

Follow Us:
Download App:
  • android
  • ios