கட்சி தொடங்கிய புதிதில், தனியாகப் போட்டியிட்டு தனக்கென குறிப்பிட்ட செல்வாக்கு இருப்பதை விஜயகாந்த் நிரூபித்ததைப் போல நடிகர் கமலஹாசனும் முயற்சித்துப் பார்க்க திட்டமிட்டுவருகிறார்.

2005-ம் ஆண்டில் கட்சித் தொடங்கிய விஜயகாந்த், 2006 சட்டப்பேரவைத் தேர்தல், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு முறையே 8.30 சதவீதம், 10.5 சதவீத ஓட்டுகளைப் பெற்றார். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திய விஜயகாந்துக்கு குறிப்பிட்ட வாக்குகள் கிடைத்தது மட்டுமல்ல, பல தொகுதிகளில் திமுக, அதிமுகவின் வெற்றி வாய்ப்புகளையும் பாதித்தார். ஆனால், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது முதல், திமுக - அதிமுகவுக்கு மாற்று என்ற தனது தனித்தன்மையை விஜயகாந்த் இழந்தார்.

தற்போது கட்சி தொடங்கி முதன் முறையாகத் தேர்தல் களத்துக்கு நடிகர் கமல்ஹாசன் வந்திருக்கிறார். தொடக்கம் முதலே அதிமுகவை விமர்சித்துவரும் கமல்ஹாசன், திமுகவைப் பற்றி எதுவும் சொல்லாமலேயே இருந்தார். இதனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து கமல்ஹாசன் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், ‘அவசரக் கைக்குலுக்களில் எங்கள் கை அசுத்தமாகிவிடக் கூடாது. அழுக்கு பொதிகளைச் சுமக்க நாங்கள் தாயார இல்லை. அதிமுக, திமுகவுடன் கூட்டணி கிடையாது’ என்று கமல் அறிவித்தார். மேலும் 40 தொகுதிகளிலும்  தனித்துப் போட்டி என்றும் கமல் பேசிவருகிறார்.

கமலின் இந்த உத்தி மூலம் திமுக, அதிமுகவுக்கு மாற்று என்ற முழுக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல கமல்ஹாசன் திட்டமிட்டுவருகிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இப்போதுவரை திமுக, அதிமுகவுக்கு மாற்று என எந்தக் கட்சிகளும் இல்லை. மாற்று என்று சொல்லிவிட்டு வந்த கட்சிகள் ஒரு கட்டத்தில் அந்தக் கட்சிகளுடனேயே கூட்டணி அமைத்துவிடுகின்றன. இதனால், மாற்று கோஷம் எப்போதும்போல அப்படியே இருந்துவருகிறது.

தற்போது கமல், அந்தக் கோஷத்தைப் பயன்படுத்த விரும்புகிறார். விஜயகாந்துக்கு தொடக்கத்தில் வாக்குகளைக் கவர திமுக, அதிமுக மாற்று என்ற முத்திரைத்தான் பயன்பட்டது. இரு கட்சிகளும் வேண்டாம் என்று நினைத்த இளைஞர்கள் பலர் விஜயகாந்துக்கு வாக்களித்தனர். இதே பாணியைப் பின்பற்றுவதன் மூலம் புதிய வாக்காளர்கள், இரு கட்சிகளின் மீதும் அதிருப்தி கொண்டவர்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று கமல் கருதுவதாக அவரது நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். திமுக, அதிமுகவுக்கு அடுத்தப்படியாக கமலுக்கு ஆதரவு இருப்பதாக அண்மையில் வெளியான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதையெல்லம் மனதில் வைத்துதான் தற்போது திமுகவுக்கு எதிராகவும் கமல் பேசத் தொடங்கியிருக்கிறார் என்று அவரது கட்சியினர் தெரிவிக்கிறார்கள். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக இந்தத் தேர்தலை கமல் பயன்படுத்திக்கொள்ளப் போகிறாரா என்பது, தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு தெரிந்துவிடப் போகிறது.