மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. இக்கட்சியின் 20 பேர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இன்று கோவையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் எஞ்சிய 20 வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்க உள்ளார் கமல்ஹாசன். அதோடு கட்சியின்  தேர்தல் அறிக்கையையும் கமல் வெளியிட உள்ளார்.
ஏற்கனவே சென்னையில் முதல் கட்ட வேட்பாளர்கள் பெயரை அறிவித்தபோது, இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் கட்சியின் முக்கியமானவர்களின் பெயர் இருக்கும் என்று கமல் தெரிவித்திருந்தார். இதன்படி இன்றைய பட்டியலில் கமல்ஹாசன், மகேந்திரன், ஸ்ரீப்ரியா, சினேகன் உள்ளிட்டோர் பெயர் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசன் அவருடைய சொந்த ஊரான ராமநாதபுரத்திலோ அல்லது சென்னையில் பல ஆண்டுகளாக வசித்து வரும் தென்சென்னையிலோ போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், திடீரென்று தேர்தலில் கமல் போட்டியிடமாட்டார் என்றும் மாறுபட்ட தகவல்கள் கட்சி வட்டாரத்தில் வெளியாகின. இதுபற்றி சில கட்சி நிர்வாகிகளிடம் பேசியபோது, ராமநாதபுரம் அல்லது தென் சென்னையில் கமல்  நிச்சயம் போட்டியிடுவார் எனத் தெரிவித்தனர்.  
இதற்கிடையே இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதி ஒன்றில் போட்டியிடவும் கட்சி நிர்வாகிகள் கமலை வற்புறுத்திவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவை, மக்களவை என இரு தொகுதிகளில் போட்டியிடுவதன் மூலம் மக்கள் மத்தியில் கட்சிக்கான அங்கீகாரம் கூடும் என்று கமலிடம் ஆலோசித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை கோவையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தி இதற்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.