Kamal will be Action against Sand Mafia

தமிழகத்தை பொறுத்தவரையில் அரசியல் அட்ராக்‌ஷனை கிளப்ப வேண்டுமென்றால் சில காரணிகளை தொட்டுப் பேசினால் போதும். ஒரு பெரும் கூட்டமே நம்மை தானாக லைம் லைட்டுக்குள் தள்ளிக்கொண்டு போய் நிறுத்தும். அந்த வித்தையை மிக தெளிவாக செய்து கொண்டிருக்கிறார் அரசியல் அடவு கட்டப்போகும் கமல்.

உணவுப் பொருள் மீதான தடை, இந்துத்வம், கருத்துரிமை போன்ற மத்திய அரசுடன் தொடர்புடைய விஷயங்களாக பார்த்து பேசி தன்னை சென்சேஷனின் மையப்புள்ளியாக்கினார் கமல். இப்போது மாநில அரசை உரசிப்பார்க்கும் தந்திரத்தை தையிலெடுத்துள்ளார். ’தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சிறப்பு கூட்டத்தின்’ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல் மணல் மாஃபியாக்களுக்கு எதிரான குண்டை வீசி ஒரு அதிரடியை துவக்கியுள்ளார். 
அது இதுதான்...

“தமிழகத்தில் ஒரு கிராமத்தில் அரசு அதிகாரிகள் துணையுடன் ஒரு ஆறு மாயமாகியிருக்கிறது. விரைவில் இதை வெளிப்படுத்துவோம்.” என்று போட்டுத் தாக்கியுள்ளார். ஆறு மாயமென்பது ஆற்று மணல் திருடப்பட்டதால் அந்த ஆறே அழிக்கப்பட்டது, அல்லது காலியாக்கப்பட்ட அந்த ஆற்றுத்தடம் மறைக்கப்பட்டிருக்கிறது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்று இதற்கு விளக்கம் கொடுக்கிறார்கள் விமர்சகர்கள். 

தமிழகத்தை பொறுத்தவரையில் அரசியல்வாதிகளுக்கு படியளக்கும் மாஃபியாக்களில் முக்கியமானவர்கள் மணல் மாஃபியாக்கள். இதனால்தான் எந்த ஆட்சி வந்தாலும் ஆற்று மணல் திருட்டு மட்டும் எந்த தங்கு தடையுமின்றி தாராளமாய் நடக்கிறது. தி.மு.க. அ.தி.மு.க. என்று எந்த பேதமும் இதற்கு கிடையாது.

கோடி கோடியாய் கொட்டும் மணல் பிஸ்னஸ் சாம்ராஜ்ய சக்ரவர்த்திகள்தான் தமிழகத்தின் மிகப்பெரிய அதிகார மையங்களாக திகழ்வதோடு, அரசியல் லாபிகளையும் செய்கிறார்கள். ஆற்று மணல் திருடல் என்பது எதிர்கால சந்ததிகளின் கண்களில் கூட நீரின்றி வற்றிட செய்து இந்த தமிழகத்தையே மிகப்பெரிய பாலவனமாக மாற்றிடும் மிக குரூரமான காரியமென்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார் கமல். விவசாயம் உள்ளிட்ட எல்லா ஆதாரங்களையும் அழித்தொழிக்கும் இந்த மணல் விவகாரம் பற்றி திரைவிலக்க துவங்கியிருக்கிறார். 

கமல் இன்று தொட்டிருப்பது வெகு சென்சிடீவான கான்செப்ட். பெரும் அரசியல்வாதிகளை தாங்கிப் பிடிக்கும் மணல் மாஃபியாக்களை குத்தி நகர்த்தினால் அரசியல்வாதிகளின் கோட்டை தானாக சரியும், மக்கள் மன்றத்தின் முன் இவர்களின் கிரீடம் மண் கவ்வப்படும் என்பதே கமலின் எதிர்பார்ப்பும், அவாவும். 

கமல் வெத்து வேட்டாய் சொல்லமாட்டார், சொன்னால் செய்துவிடுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். கொசஸ்தலை ஆற்று விவகாரத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது அவரது சிங்கிள் விசிட்தான். அந்த வகையில் அவர் அந்த மாயமாய் போன ஆற்றை பற்றிய ரகசியங்களை வெளியிடுகையில் அதிகார மையங்களில் இருக்கும் பலரின் நிலை அந்தலிசிந்தலியாகும் என்கிறார்கள். வெறும் அரசியல்வாதிகளுக்கு மட்டும் வேட்டு வைப்பதாக இல்லாமல் அதிகாரிகளுக்கும், மணல் மாஃபியாக்களுக்கும் கமல் டீமின் இந்த ஆபரேஷன் பெரும் தலைகுனிவை கொடுக்குமென்றே எதிர்பார்க்கப்படுகிறது.