Asianet News TamilAsianet News Tamil

போபாலில் நடந்த மாதிரி சம்பவம் தூத்துக்குடியில் நடந்துவிட கூடாது!! எச்சரிக்கும் கமல்

kamal warning about sterlite factory in tutucorin
kamal warning about sterlite factory in tutucorin
Author
First Published Mar 29, 2018, 3:50 PM IST


போபால் சம்பவத்தை போன்ற ஓர் அவலம் தூத்துக்குடியில் நடந்துவிடக் கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி சிப்காட்டில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வலியுறுத்தி குமரெட்டியாபுரம் மக்கள் 46 நாட்களாக போராடி வருகின்றனர். அந்த ஆலையிலிருந்து நச்சுவாயு வெளியேறுவதால், மூச்சுத்திணறல், தொண்டை எரிச்சல், கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல நோய்களுக்கு அக்கிராம மக்கள் ஆளாகியுள்ளனர்.

மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ள அந்த ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்திவருகின்றனர். ஏற்கனவே இருக்கும் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தப்படும் நிலையில், ஆலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டதால் கொந்தளித்த மக்கள், தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அடுத்த சந்ததியாவது ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வழிசெய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்தார். 

மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டியது அவசியம். போபாலில் நடந்தது போன்ற மற்றுமொரு சம்பவம் தூத்துக்குடியில் நடக்காமல் தடுக்க வேண்டும். எனவே தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்வதாக தெரிவித்தார்.

மத்திய பிரதேசம் மாநில தலைநகர் போபாலில் அமெரிக்காவை சேர்ந்த வாரன் ஆண்டர்சன் என்பவருக்கு சொந்தமான யூனியன் கார்பைடு என்ற பெயரில் பூச்சி கொல்லி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலையில் இருந்து 1984ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி அதிகாலையில் மீத்தைல் ஐசோ சயனைட் என்ற நச்சுவாயு கசிவு ஏற்பட்டதில், பல்லாயிரக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தைத்தான் கமல் நினைவுகூர்ந்துள்ளார். அதுபோன்றதொரு சம்பவம் தூத்துக்குடியில் நடந்துவிட கூடாது என கமல் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios