விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு தடம் புரளும்…. சர்கார் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த கமல் !!

https://static.asianetnews.com/images/authors/7c75b3b3-3057-52ee-ad74-0f9554f16f46.jpg
First Published 8, Nov 2018, 9:47 PM IST
kamal twitter about sarkar
Highlights

சர்கார் படப் பிரச்சனையில் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ள நடிகர் கமல்ஹாசன், அரசியல் வியாபாரிகள்  கூட்டம் விரைவில் ஒழியும் என்றும் . நாடாளப்போகும்  நல்லவர் கூட்டமே வெல்லும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து நடிகர் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளார்.

நடிகர் விஜயின் ‘சர்கார்’  படத்தில் தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது மற்றும் படத்தின் வில்லி பாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் இயற் பெயரை சூட்டியது அதிமுகவினரை கோபம் அடைய செய்துள்ளது.

இதையடுத்து அதிமுகவினர் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். திரையரங்குகளில் போராட்டம் நடத்தியவர்கள் பேனர்களை கிழித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டம் காரணமாக திரையரங்குகளில் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

போராட்டம் தொடர்ந்த நிலையில் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவங்களுக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார்  படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை  ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள்  கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும் என குறிப்பிட்டுள்ளார். 

loader