நடிகர் கமல் ஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது, தமிழக அரசியல் தொடர்பாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்றும் இரண்டு பதிவுகளை டுவிட்டியுள்ளார்.

சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற முரசொலி நாளிதழின் பவள விழாவில், நடிகர் கமல் ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, முரசொலி பவள விழாவில் கலந்து கொள்வதா? வேண்டாமா? என கேள்வி எழுந்தபோது, தற்காப்பு முக்கியமில்லை, தன்மானம்தான் முக்கியம் என்று நினைத்து விழாவில் பங்கேற்றதாக கூறினார்.

இதன் பின்னர், கமல், தனது டுவிட்டர் பக்கத்தில், விம்மாமல், பம்மாமல், ஆவண செய், புரட்சியின் வித்து தனிச் சிந்தனையே, ஓடி என்னைப் பின் தள்ளாதே களைத்தெனைத் தாமதிக்காதே. கூட நட, வெல்வது நானில்லை நாம் என்று அதில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த சில நிமிடங்களுக்குப் பிறகு, கமல் வேறொரு டுவிட்டை பதிவிட்டார். அதில், புரிந்தவர் புரியாதோர்க்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே. மூப்பெய்தி மாளும் முன், சுதந்திரம் பழகு. தேசியமும் தான் என அதில் பதிவிட்டுள்ளார். 

கமலின் இந்த பதிவு, தமிழக அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ரஜினிக்காக இந்த பதிவு செய்யப்பட்டுள்ளது சில ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.