திடீரென குடியுரிமை சட்ட திருத்த விவகாரத்தில் ஸ்டாலினுடன் இணைந்து செயல்பட கமல் முடிவு செய்திருப்பது பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் திட்டம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குடியுரிமை சட்ட திருத்த விவகாரத்தில் திமுக மோடிக்கு எதிராக மிகத் தீவிரமாக அரசியல் செய்ய முடிவு செய்துள்ளது. அதிலும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை இல்லை என்கிற அந்த சட்டத்தின் அம்சத்திற்கு காரணமே அதிமுக தான் என்று கூறி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் முடிவில் திமுக மும்முரமாக உள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக – அதிமுகவிற்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்று சேர்க்க ஸ்டாலின் முடிவு செய்தார்.

அதில் குறிப்பிடத்தக்க விஷயமாக கமலை செல்போனில் தொடர்பு கொண்டு சென்னையில் திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டத்திற்கு வருமாறும் கேட்டுக் கொண்டார் ஸ்டாலின். ஆனால் கூட்டத்திற்கு வரவில்லை, அங்கு எடுக்கும் முடிவிற்கு தங்களுக்கு உடன்பாடு இருந்தால் இணைந்து செயல்படுவோம் என்று கமல் கூறியிருந்ததாக சொல்கிறார்கள். அதன்படி, குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சென்னையில் பிரமாண்ட பேரணி நடத்த திமுக முடிவு செய்துள்ளது.

இந்த பேரணியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறி அதிர வைத்துள்ளார் கமல். ஏனென்றால் வழக்கமாக திமுக தொடர்புடைய கூட்டங்களில் கலந்து கொள்வதை கமல் தவிர்த்து வருகிறார். கடந்த முறை அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்ட போது, தனது கட்சி பிரதிநிதிகளைத்தான் கமல் அனுப்பி வைத்தார். அவர் செல்லவில்லை. இதே போல் கமல் கட்சி நடத்திய அனைத்து கட்சி கூட்டத்திற்கு திமுக யாரையும் அனுப்பி வைக்கவில்லை.

இப்படி இரண்டு கட்சிகளும் ஏறுக்கு மாறாக அரசியல் செய்து வந்த நிலையில் திடீரென இருவரும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்திருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக ரஜினி – கமல் இணைந்து அரசியல் செய்வார்கள் என்கிற பேச்சு அடிபட்டு வந்தது. இணைந்து செயல்படத்தயார் என்று ரஜினி வெளிப்படையாகவே கூறினார்.

இந்த நிலையில் திடீரென கமல் திமுக பக்கம் சாய்ந்துள்ளார். இந்த நடவடிக்கை வெறும் குடியுரிமை சட்டத்திருத்திற்கு எதிரானதாக மட்டுமே இருக்காது என்கிறார்கள். தேர்தல் கூட்டணியை மனதில் வைத்து தான் கமலும் – ஸ்டாலினும் இந்த விஷயத்தில் இணைந்துள்ளார்கள் என்று கூறுகிறார்கள். அதிலும் தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சியில் திமுக மட்டுமே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீவிரமாக களம் ஆடுகிறது. அதற்கு அடுத்தபடியாக இந்த விவகாரத்தில் கமல் பேசுவது எடுபடுகிறது.

எனவே தான் கமலுடன் இணைந்து செயல்பட ஸ்டாலின் ஓகே சொன்னதாக சொல்கிறார்கள். அதே சமயம் இந்த பின்னணியில் பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். தற்போது திமுகவிற்கான வியூகத்தை வகுத்து வரும் கிஷோர் ஏற்கனவே கமலுடன் தொடர்பில் உள்ளார். அவரது பேச்சைக் கேட்டுத்தான் கமல் – ஸ்டாலின் இணைந்துள்ளதாகவும் பேசப்படுகிறது. மேலும் துவக்கத்தில் ரஜினி – கமலை இணைத்து வியூகம் வகுத்த பிகே, தற்போது ரஜினியை சுத்தலில் விட்டுவிட்டு ஸ்டாலினை உள்ளே இழுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.