‘தோற்றாலும் பரவாயில்லை. கணிசமான வாக்குகள் வாங்கிக் காட்டினாலே போதும். அதனால் திருவாரூர் இடைத் தேர்தலில் நீங்கதான் நிக்கணும்’ என்று கமலை அவரது கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து வற்புறுத்திவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘எப்போது இடைத்தேர்தல் நடந்தாலும் மக்கள் நீதி மய்யம் கட்சி களத்தில் நிற்கும்’ என்று முன்னரே அறிவித்திருந்த கமல், திருவாரூருக்கு இடைத்தேர்தல் அறிவித்த பிறகும் அதை உறுதி செய்தார். இதையொட்டி நேற்று கமல் அலுவகலத்தில் நாள் முழுக்க முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

அக்கூட்டத்தில் இடைத்தேர்தலில் யாரை நிறுத்தலாம் என்பது குறித்து நடந்த விவாதத்தில் கமல், இயக்குநர் அமீர், கவிஞர் சிநேகன், பட்டி மன்றப் பேச்சாளர் கு.ஞாமசம்பந்தன் உட்பட பல பெயர்களை சிபாரிசு செய்ததாகத் தெரிகிறது.

ஆனால் நிர்வாகிகள் அனைவருமே ஒட்டுமொத்தக் குரலில் கமல் போட்டியிடவே விருப்பம் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. மேல் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க. ஓட்டுக்களை அழகிரி பிரிப்பார். கஜா புயலில் நமது கட்சி கணிசமாகப் பணியாற்றியுள்ளது. எனவே நமக்கு சாதகமான வாய்ப்புகள் உள்ளன. வெற்றிபெற வாய்ப்பிருக்கிறதோ இல்லையோ கணிசமான வாக்குகள் நம் கட்சிக்குக் கிடைக்கும். எனவே கமல்தான் போட்டியிடவேண்டும் என அனைவருமே கூறி வருவதால் கமல் போட்டியிடக்கூடும் என்றே தெரிகிறது.