திருவள்ளுவர் கிறிஸ்துவரா என்று நானே பேச்சுப் போட்டியில் பேசி இருக்கிறேன். ஆனால், திருவள்ளுவர் எந்த மதத்துக்கும் சொந்தமல்ல என்று நடிகரும் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் 65வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.  தனது சொந்த ஊரான பரமக்குடியில் நடைபெறும் விழா ஒன்றில் தன்னுடைய தந்தை சீனிவாசனின் சிலையையும் திறன் வளர்க்கும் மையத்தையும் அவர் திறந்து வைக்கிறார். இதற்காக நேற்று மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 
60 ஆண்டு கால திரைப்பயணத்தில் அரசியல் பயணமும் உள்ளதைப் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த கமல், “நடிப்பு, கலை என்பது என் தொழில். அரசியல் என்பது மக்களுக்காகச் செய்யும் எனது கடமை. இந்தப் பயணத்தில் இதுதான் வித்தியாசம்” என்று தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகிவிட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த கமல், “உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கட்சியில் செய்யப்பட்டு வருகின்றன.” என்று தெரிவித்தார்.


திருவள்ளுவரை வைத்து தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசியல் நிகழ்வுகள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த கமல், “திருவள்ளுவரை எல்லா மதத்தினரும் தனதாக்கிக் கொள்ள விரும்புகிறார்கள். இப்படி சொந்தம் கொண்டாடுவது இதுவே முதல் முறை அல்ல. திருவள்ளுவர் கிறிஸ்துவரா என்று நானே பேச்சுப் போட்டியில் பேசி இருக்கிறேன். ஆனால், திருவள்ளுவர் எந்த மதத்துக்கும் சொந்தமல்ல. அவர் ஒரு பொதுக் சொத்து என்பதே உண்மை. அதேபோல அவருக்கு எந்த வண்ணமும் பூச தேவையில்லை.” என்று தெரிவித்தார்.