25 ஆண்டுகளாக கிராமசபை என்ற ஒன்று இருந்ததே உங்களுக்கு தெரியாதா? என்னைப்பார்த்து காப்பியடிப்பது வெட்கமாக இல்லையா என மக்கள்நீதி மய்யம்க் கட்சி தலைவர் கமல்ஹாசன் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை, ஆா்.ஏ.புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கமல்ஹாசன், ‘’உங்கள் முகத்தை பார்க்கும் போது நல்லவர்கள் தலைவராக தெரியாவிட்டால் கெட்டவர்கள் தலைவராக தெரிவார்கள். முதலமைச்சர் என்பவர் மக்களுக்காக உழைக்கும் அதிகாரி. ஆட்சியில் இருப்பவர்கள் 5 ஆண்டுகள் சரியாக ஆட்சி செய்கிறார்களா? என்பதை கவனியுங்கள். யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். ஆனால் நிச்சயம் வாக்களியுங்கள்.

கடந்த 25 ஆண்டுகளாக கிராமசபை அமைப்பு உள்ளது. இத்தனை ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல் என்னைப் பார்த்து கிராமசபைக் கூட்டங்களை நடத்துகிறீா்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்.  மேலும் அவா் பேசுகையில், ’’நான் ஏன் மக்களவைத் தோ்தலில் போட்டியிருகிறேன் என்று கேள்வி எழுப்புகின்றனா். கட்சி தொடங்கிய பின்னா் தோ்தலில் போட்டியிடாமல் இருக்க முடியாது. டெல்லி அரசியல் வேறு, தமிழக அரசியல் வேறு என்று கூறமுடியாது. டெல்லியை தவிர்த்தாலும் அரசியல் செய்ய முடியாது. 

சமூக வலைதளங்களில் நீங்கள் குரல் கொடுப்பதே அரசியல்தான். நேரத்தை வீணடிப்பதற்கு பதில் வாக்குச்சாவடி செல்லுங்கள். வாக்களியுங்கள். அரசியலில் என்னையும், என்னுடைய நேரத்தையும் முதலீடு செய்துள்ளேன். அரசியலுக்கு வந்ததால் 4 படங்கள் நடிப்பதற்கு பதில் 1 படத்தில் மட்டும் நடிக்கிறேன். 

இளைஞா்கள் அரசியலுக்கு வருவதை இப்போதே முடிவு செய்ய வேண்டும். நான் தாமதமாக அரசியலுக்கு வந்ததை நினைத்து வருத்தப்படுகிறேன். நான் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.  யார்வேண்டுமானாலும் அதனை படிக்கலாம். நான் சட்டப்பேரவைக்கு வந்தால் சட்டையை கிழித்துக் கொண்டெல்லாம் வெளியே வரமாட்டேன். தமிழன் என்பது தகுதியல்ல. அது ஒரு விலாசம். நீங்கள் என்ன செய்தீா்கள் என்பது தான் முக்கியம் என்று அவா் தெரிவித்துள்ளார்.