kamal retaliates palanisamy government in rameswaram
அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்திலிருந்து தொடங்கிய கமல், இன்று காலை அப்துல் கலாமின் இல்லத்திற்கு சென்று கலாமின் மூத்த சகோதரரிடம் வாழ்த்து பெற்றார்.
அதன்பிறகு அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார் கமல். ஆனால் பள்ளிக்குள் நுழைய கமலுக்கு தடை விதிக்கப்பட்டதால், பள்ளிக்கு வெளியே நின்று வணங்கிவிட்டு சென்றார்.
அதைத்தொடர்ந்து மீனவர்களை சந்தித்த கமல், அவர்களுடன் கலந்துரையாடினார். அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல், அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது பேசிய கமல், அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு செல்ல வேண்டும் என நான் நினைத்ததில் அரசியல் இல்லை. ஆனால், பள்ளிக்கு செல்ல எனக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. நான் பள்ளிக்கு செல்வதை தடுக்கலாம். ஆனால் பாடம் படிப்பதை தடுக்க முடியாது என அதிரடியாக தெரிவித்தார்.
