அரசியலில் ‘இல்லை’ என்பார்கள் ஆனால் அது வலுவாக ’இருக்கும்’. அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் விவகாரம். ஸ்டாலினும், திருநாவுக்கரசரும் தங்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்னையுமில்லை! நாங்கள் ஒன்றாகத்தான் அரசியலில் பயணிக்கிறோம்! என்று எத்தனை முறை சொன்னாலும் கூட அதில் பிசிறு இருக்கிறது என்பதை சில விஷயங்கள் தொடர்ந்து உணர்த்திக் கொண்டேதான் இருக்கின்றன அழுத்தமாக. அந்த வகையில் இந்த கூட்டணி உடையும் என்று கமல்ஹாசன் கொளுத்திப்போட்டது இரு கட்சிகளுக்குள்ளும் பற்றி எரிகிறது.

 

ஸ்டாலின் கடுப்போடு இதைக் கடந்து போய்விட அரசரோ கமல், நெருங்கி வருவது குறித்து அகமகிழ்ந்து போயிருப்பார் போல. இதை உறுதிப்படுத்தும் விதமாக பேசியிருக்கும் அரசர்...”காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும்! என கமல் சொல்லவில்லை. ஆனால் அதேவேளையில், எங்களுக்கு எதிராக் எதையும் அவர் சொல்லாததும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மட்டுமல்ல பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூட்டணி விருப்பமாக பேசியிருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவையெல்லாமே மோடி பலவீனமடைந்திருப்பதை காட்டுகிறது. இதனால்தான் காங்கிரஸை தேடித்தேடி எல்லோரும் வருகிறார்கள். 

நாங்கள் தற்போது தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம். தி.மு.க.வை ஏற்றுக் கொண்டு கமல்ஹாசன் உள்ளிட்ட யார் வந்தாலும் ஸ்டாலினிடமும், ராகுலிடமும் பேசி ஒரு முடிவு எடுப்போம். மற்றபடி நிபந்தனை விதிப்பவர்களுக்கெல்லாம் இங்கே இடமில்லை, இடமில்லை.” என்று தடாலடியாக தகவல்களை அள்ளி தட்டியுள்ளார். தன்னால் ‘காகித பூக்கள்’ என்று விமர்சிக்கப்பட்ட கமல்ஹாசனை இப்படி அரசர் ஆதரித்துக் கொண்டாடுவது ஸ்டாலினுக்கு கடும் கடுப்பை கிளப்பியுள்ளது. 

அதிலும் ‘தி.மு.க.வின் தலைமையை ஏற்றுக் கொண்டு கூட்டணிக்கு வருபவர்களை பற்றி யோசிப்போம்.’ என்று சொல்லாமல் ‘தி.மு.க.வை ஏற்றுக் கொண்டு’ என்று அரசர் சொல்லியிருப்பதை செம்ம ஆதங்கத்துடனே அடிக்கோடிட்டு பார்க்கிறார் ஸ்டாலின். இவையெல்லாம் சேர்ந்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குள் கோலிக்கா சைஸில் ஒரு குண்டை வெடிக்க வைத்திருப்பது உண்மைதான். இது விஸ்வரூபமாகுமா அல்லது புஸ்ஸென போகுமா என்பதை கவனிக்க வேண்டும். ஆக மொத்ததில் கமல், அரசியலில் சாணக்கியராக இருக்கப்போகிறாரோ இல்லையோ நல்ல நாரதராக இருப்பார் போல!