மத்தியபிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு சட்டமன்றத்தில் தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு பாஜக வலியுறுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. கடும் போட்டிக்கு இடையே கமல்நாத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.  230 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு 114 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 109 உறுப்பினர்களும் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 , சமாஜ்வாடி கட்சிக்கு ஒரு உறுப்பினரும், 4 சுயேட்சை உறுப்பினர்களும் உள்ளனர். ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. ஆனால் பாஜக பலம் வாய்ந்த எதிர்க்கட்சியான வலம் வருகிறது. 

இந்நிலையில், காங்கிரஸ் அரசு மைனாரிட்டியாக உள்ளதாகவும், அது தன்னுடைய பலத்தை அவையில் நிரூபிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மத்தியப் பிரதேச எதிர்க்கட்சி தலைவர் கோபால் பார்கவ் ஆளுநர் ஆனந்தி பென் படேலுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அவர் தன்னுடைய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள எம்.எல்.ஏக்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாகவும், வேறு கட்சிகளுக்கு தாவ அவர்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் மத்திய பிரதேசத்தில் பாஜக அதிக இடங்கள் கைப்பற்ற உள்ளதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.