கர்நாடக முதல்வர் குமாரசாமியை பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். 

கர்நாடக முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி பதவியேற்றுள்ளார். தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரை பகிர்ந்துகொள்வது தொடர்பான விவகாரம் பல காலங்களாக நீடித்து வருகிறது. தற்போதுதான் அதற்கு தீர்வு காணும் வகையில், காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரஜினியின் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காலா விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என குமாரசாமி தெரிவித்திருந்தார்.

காவிரி விவகாரம் நீடித்து வரும் நிலையில், கர்நாடகாவின் புதிய முதல்வரான குமாரசாமியை மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய கமல், காலா திரைப்படம் தொடர்பாக எதுவும் பேசவில்லை. திரைப்படங்களை விட தண்ணீர் முக்கியம். காலா திரைப்பட விவகாரத்தை படக்குழுவினர் கவனித்துக்கொள்வர். எனவே அதைப்பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. நான் தமிழக மக்களின் சார்பாக கர்நாடக மக்களின் பிரதிநிதியை சந்தித்துள்ளேன். இதுபோன்ற ஆரோக்கியமான சந்திப்புகள்தான் முக்கியம். இரு மாநிலங்களுக்கு இடையேயான விவகாரத்தை இரு மாநில மக்களும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். முடியாத பட்சத்தில் கடைசி வாய்ப்பாகத்தான் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும் என பேசினார்.

அப்போது பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, நாம் சகோதரர்கள். எனவே இரு மாநில விவசாயிகளின் நலனும் முக்கியம். அதனால் நீரை சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும். பரஸ்பர புரிதலுடன் இரு மாநிலங்களும் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.