kamal meet fishermen and hug all of them
தனக்கு பொன்னாடை போர்த்தி பழக்கம் இல்லை என்பதால், என்னையே ஆடையாக போர்த்துகிறேன் எனக்கூறி தன்னை சந்திக்க வந்த மீனவர்கள் அனைவரையும் கமல் கட்டிப்பிடித்து அசத்தினார்.
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கினார். இதன் ஒரு பகுதியாக திருமண மண்டபம் ஒன்றில் மீனவர்களை சந்தித்து அவர்களது குறைகள் மற்றும் கருத்துக்களை கேட்பதாக இருந்தார், இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

ஆனால் கமல்ஹாசன் அங்கு வந்து இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசினார், மீன் பிடித் தொழில் முக்கியமான தொழில் என்றும் அதனை பாதுகாப்பது நமது கடமை என்றும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மற்றொரு நாள் வந்து உங்களை சந்திப்பதாகவும், அப்போது குறைகள், கருத்துக்கள் குறித்து பேசுவோம் என்று கூறிவிட்டு கமல் அங்கிருந்து சென்று விட்டார்.
இதனால் நீண்ட நேரம் காத்திருந்தும் தங்களிடம் கமல் சரியாக பேசவில்லை என்று மீனவர்கள் அதிருப்தியடைந்தனர். தங்களை கமல் ஏமாற்றிவிட்டதாக மீனவர்கள் புலம்பித் தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த கமலஹாசன், உடனடியாக மீனவ பிரதிநிதிகளை ஹோட்டலுக்கு வரவைழைத்து பேசினார்.

அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்த கமலஹாசன், மீனவர்களது பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய கமல், தனக்கு பொன்னாடை போர்த்தி பழக்கம் இல்லை என்பதால், என்னையே ஆடையாக போர்த்துகிறேன் எனக்கூறி தன்னை சந்திக்க வந்த மீனவர்கள் அனைவரையும் கமல் கட்டிப்பிடித்து அசத்தினார்.
