பாஜகவை சேர்ந்த யாரும் கமலைத் திட்ட கூடாது. அவரை விமர்சனம் செய்தும் பேச வேண்டாம். ஒருவேளை கமல் நம்மை விமர்சனம் செய்தால் எந்த ரியாக்‌ஷனும் காட்ட வேண்டாம் ஸ்ட்ரிக்டாக ஆர்டர் போட்டுள்ளதாம் பாஜக மேலிடம். காரணம் என்னன்னா பாஜகவை இப்படி பதற வைத்ததே  உளவுத்துறை ரிப்போர்ட் தானாம்.

கடந்த சில இடைதேர்தல்களில் பாஜக படுதோல்வியை சந்தித்து வருகிறது. ரஜினியும்  கமலும் கட்சி தொடங்குவதற்கு முன்பே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக நோட்டா வோடு போட்டி போட்டு பாதளத்தில் விழுந்தது.

இந்நிலையில் தமிழிசை, ஹெச் ராஜா போன்ற தமிழக பாஜக தலைவர்கள் தேவையில்லாமல் மெர்சல் விவகாரம், பெரியார் சிலை விவகாரம் என ஊர் வம்பை விலைக்கு வாங்கி வருகிறதாம். இது போதாதென்று ரஜினி, கமல் என இரு பெரும் நட்சத்திர அரசியல் தலைவர்களை அனாவசியமாக வம்புக்கிழுப்பது என பாஜகவிற்கு தலைவலியை ஏற்படுத்துவதாக டெல்லி மேலிடம் நினைக்கிறதாம்.

இப்படி போய் கொண்டிருக்கையில் தமிழகத்தில் எப்படியும் தாமரையை மலர வைக்க தலையால் தண்ணி குடித்துக் கொண்டிருக்கிறது பாஜக. ஆனால் தமிழக பாஜகவின் அணுகுமுறையால் அது எட்டாக் கனியாகும் கதையாக முடிகிறது.

சரி என்னதான் செய்வது என யோசித்து உளவுத்துறையிடம் தமிழக அரசியல் எப்படி இருக்கிறது என கேட்டிருக்கிறது டெல்லி மேலிடம். தமிழ்நாட்டில் புதிகாக அரசியலில் என்ட்ரி ஆகியிருக்கும் கமல், ரஜினி பற்றி இருவரில் யாருக்கு அதிக செல்வாக்கு என விசாரித்ததில்.

இதையடுத்து கமல் ரஜினி இருவர் பற்றியும் கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை மக்களிடம் பேசி அலசி ஆராயப்பட்ட ரிப்போர்ட் டெல்லிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் டெல்லிக்கே ஆச்சர்யம் கலந்த ஷாக் ஆக இருந்ததாம்.

ஆமாம் என்ன அந்த உளவுத்துறை ரிபோர்ட்?  ரஜினி மாஸ் ஆனவர், கிராமங்களில் செல்வாக்கு மிக்கவர் என்றெல்லாம் ஒரு பிம்பம் தமிழ்நாட்டில் ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இதெல்லாம் சினிமாவில்தான். உண்மையில் அப்படி ஒரு பிம்பமே இல்லையாம்.

அரசியல் ரீதியாக ரஜினிக்கு கிராம அளவிலோ, தலித் மக்களிடமோ, பெண்களிடமோ பெரிய அளவு செல்வாக்கு இல்லை என்று தெரியவந்திருக்கிறது. மேலும் இருபது முதல் நாற்பது வயதுக்குட்பட்ட பெரும்பாலான இளைஞர்களுக்கு ரஜினி தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்ற உணர்வு இருக்கிறது, இதுவே அடிப்படையில் அவர்கள் ரஜினிக்கு எதிராகவே இருக்கிறார்கள் என்றும் அந்த உளவுத்துறை ரிப்போர்ட்டாம்.

ஆனால், இதே அளவுகோலைக் கமலுக்கு வைத்துப் பார்க்கும்போது வெளி மாநிலத்துக்காரர் என்ற எதிர்ப்பு கமலுக்கு இல்லை. மேலும் கமல் பேசும் கருத்துகள் இளைஞர்களிடம், படித்தவர்களிடம் எடுபடுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரஜினிக்கு ஆதரவு இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவருக்கு எதிர்ப்பு இருப்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் கமலுக்கு இந்த எதிர்மறைத் தன்மை இல்லாததால் அவர் தடையில்லாமல் வளர்ந்துகொண்டிருக்கிறார் என்பதுதான் அந்த ஆய்வறிக்கையின் இறுதிப் பொருள்.

அவர் மீது எந்த விமர்சனமும் வைக்கும் அளவிற்கு அவர் பேச்சு இல்லை, தெளிவாகவும் சொல்லவந்த விஷயத்தை சுற்றி வலைக்கமலும் பேசுவது என இதை மீண்டும் மீண்டும் உறுதி செய்துகொண்ட டெல்லி அதன் பிறகு தமிழகத்தை மையமாக வைத்துச் சில முடிவுகளை மேற்கொண்டிருக்கிறது.

இதையே, தமிழக பாஜக தலைமைக்கும் அறிவுரையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ’அதாவது ஆன்மிக அரசியல் என்ற பெயரில் அரசியலில் நுழைந்திருக்கும் ரஜினி பாஜகவின் ஆள் என்று தமிழ்நாட்டில் பேச்சு இருக்கிறது. அது ஒருபக்கம் இருக்கட்டும்.

இனி எந்தக் காரணத்துக்காகவும்  பாஜகவை சேர்ந்த யாரும் கமலைத் திட்டக் கூடாது. அவரை விமர்சனம் செய்தும் பேசத் தேவை இல்லை. டிவி விவாதங்களில் பங்கேற்பவர்களும் இதைப் பின்பற்றச் சொல்லுங்கள். பாஜக என்பது கமலுக்கு எதிரி இல்லை என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும்' என பாஜக டெல்லி தலைமை அட்வைஸ் செய்ததாம்.

ஒருவேளை கமல் நம்மை விமர்சனம் செய்தால் என்ன செய்வது? என கேட்டிருக்கிறார்கள். அதற்கு, அப்படியே அவர் விமர்சனம் செய்தாலும், அதற்கு எந்த ரியாக்‌ஷனும் காட்ட வேண்டாம் என்று ஸ்ட்ரிக்டாக சொன்னார்களாம்.