கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மக்கள் நீதி மய்யம் கமலை விமர்சித்தும் கலாய்த்தும் பேசி வந்த திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி இந்த முறை கமல் பற்றி பேசுவதே இல்லை.

திமுக கூட்டணியில் ஏற்கனவே நிறைய கட்சிகள் உள்ள நிலையில் தொகுதிப் பங்கீடு பிரச்சனை காரணமாக ஒரு சில கட்சிகள் விலகுவது உறுதி. அந்த கட்சிகள் போனாலும் பரவாயில்லை என்கிற முடிவில் திமுக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் எதிர்பார்த்ததை விட அதிக தொகுதிகளை திமுக கொடுத்துள்ளது. எனவே சட்டப்பேரவை தேர்தலில் தாங்கள் கொடுக்கும் நியாமான தொகுதிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே திமுகவின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால்இதற்கு முன்பு அந்தந்த கட்சிகள் வழக்கமாக போட்டியிடும் தொகுதிகளை காட்டிலும் பாதி அளவே தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது.

இதனால் காங்கிரஸ் மட்டும் அல்லாமல் வேறு சில கட்சிகளும் கூட கூட்டணிக்கான வேறு வாய்ப்புகளை ஆராய ஆரம்பித்துள்ளன. ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் கூட்டணிக்கு வாக்கு வங்கி மற்றும் பிரச்சார பலம் கொண்ட கட்சிகளை சேர்க்க திமுக காய் நகர்த்த ஆரம்பித்துள்ளது. அதோடு மட்டும் அல்லாமல் கமலின் மக்கள் நீதி மய்யம், விஜயகாந்தின் தேமுதிக மட்டும் அல்லாமல் பல்வேறு சிறிய கட்சிகளும் கூட்டணி கனவோடு திமுக கதவை தட்ட ஆரம்பித்துள்ளன. இந்த கட்சிகளில் திமுக கமலின் மக்கள் நீதி மய்யம் மீது அலாதி பிரியத்துடன் உள்ளது.

காரணம் கமலின் இமேஜ். திமுக மீது ஊழல் கட்சி என்கிற இமேஜ் உள்ளது. ஆனால் கமல் கூட்டணிக்கு வந்து திமுகவிற்காக பிரச்சாரம் செய்தால் மக்கள் மனதில் சாதகமான ஒரு விளைவை ஏற்படுத்தும் என்று திமுக மேலிடம் கருதுகிறது. இதனால் தான் உதயநிதி ஸ்டாலின், இரண்டு முறை வீடு தேடிச் சென்று கமலை சந்தித்து பேசியுள்ளார். அப்போது கமல் தரப்பில் திமுக கூட்டணியில் 40 தொகுதிகள் வரை வேண்டும் என்று எதிர்பார்ப்பை கூறியுள்ளனர். ஆனால் அவ்வளவு வாய்ப்பு இல்லை என்று கூறி 21 தொகுதிகள் வரை ஒதுக்கத் தயார் என்று உதயநிதி தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கமல் செல்லும் இடங்களில் கூடும் கூட்டம், அவருக்கு கிடைத்துள்ள ஊடக வெளிச்சம் போன்றவற்றை வைத்து மேலும் சில தொகுதிகளை கொடுத்தாவது கூட்டணியை உறுதிப்படுத்த திமுக முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்கள். வழக்கம் போல் உதயநிதி தரப்பில் இருந்தே மறுபடியும் கமலை தொடர்பு கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள். எனவே தான் கமல் தனது பிரச்சாரத்தின் போது திமுகவை விட்டுவிட்டு அதிமுகவை அதிகம் விமர்சிக்க ஆரம்பித்துள்ளதாக சொல்கிறார்கள்.

கூட்டணி இல்லாமல் ஒரு சீட் வெற்றி பெற முடியாது என்று கமல் புரிந்து வைத்துள்ளார். எனவே கட்சியை தொடர்ந்து நடத்த எம்எல்ஏக்கள், உள்ளாட்சித் தேர்தல் பதவிகள் என பல விஷயங்களை கருத்தில் கொண்டு திமுக கூட்டணிக்கு கமல் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த உடன் கமல் அறிவாலயம் வந்து ஸ்டாலினை சந்திப்பார் என்கிறார்கள். அப்போது 21 முதல் 26 தொகுதிகள் மக்கள் நீதி மய்யத்திற்கு என்று டீல் முடிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.