தேனி மாவட்டம் குரங்கணி பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த நிஷாவின் குடும்பத்தினரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை குரங்கணியை அடுத்த கொழுக்கு மலைப் பகுதியில ஏற்பட்ட தீ  விபத்தில்  40 பேர் சிக்கிக் கொண்டனர். இதில் 16 பேர் உயிரிழந்தனர். 6 பேர் மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்தில் சென்னை மடிப்பாக்கத்தைச் நிஷா தமிழ்ஒளி என்பவரும் உயிரிழந்தார்.

இதையடுத்து இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், மடிப்பாக்கத்தில் உள்ள நிஷாவின் வீட்டுக்கு நேரில் சென்றார். நிஷாவின் தங்தை மற்றும் குடும்பத்தினருக்கு  கமல் ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது இனி மேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மலையேற்றப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டார்.