எக்ஸிட் போல்! எனும் டிரெய்லர் சொன்னது போலவே மெயின் பிக்சரான ரிசல்ட்டும் பி.ஜே.பி.க்கு செம்ம சாதகமாகவே உள்ளது. தமிழகம், கேரளம் ஆகிய தென் மாநிலங்கள் மட்டுமே அக்கட்சிக்கு எதிர் நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அதிலும் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியின் பாய்ச்சலானது பெரும் பாய்ச்சலாக போய்க் கொண்டிருக்கிறது. 

ஆக தமிழகத்தில் ஸ்டாலினின் கொடி உயரப் பறக்கும் நிலையில், கமல்ஹாசன் செம்ம ஹேப்பியில் இருப்பதாக ஆழ்வார்பேட்டையிலிருந்து தகவல்கள் வருகின்றன. ஸ்டாலினின் வெற்றிக்கு கமல்ஹாசன் ஏன் சந்தோஷப்பட வேண்டும்? என்கிறீர்களா!

ஆக்சுவலாக கமலின் சந்தோஷம் தி.மு.க.வின் வெற்றிக்காக இல்லை. பல இடங்களில் அ.ம.மு.க.வை விட அதிகமாக மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் வாக்குகள் வாங்கியுள்ளதை பார்த்துதான் கமலுக்கு சந்தோஷம். 

தமிழகத்திலிருக்கும் 39 தொகுதிகளில் பொள்ளாச்சி தொகுதியை பெரிதும் எதிர்பார்த்தார் கமல். வெற்றி பெறுவோம் என நினைக்கவில்லை, ஆனால் கணிசமான வாக்குகள் கிடைக்குமென நினைத்தார். காரணம், ம.நீ.ம.வின் துணை தலைவரான டாக்டர்.மகேந்திரனின் சொந்த ஊர் பொள்ளாச்சி. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து அக்கட்சிக்கு தலைமை அலுவலகம் இருப்பதும் இங்குதான். இங்கே நிறுத்தப்பட்ட வேட்பாளர் மூகாம்பிகைக்கு பரவலான வரவேற்பையும் பெற்றார். 

இந்நிலையில், காலை 9:40 நிலவரப்படி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரம் முன்னிலையில் நிற்க....மூன்றவது இடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மூகாம்பிகை 2,082 வாக்குகள் பெற்றிருக்க, அ.ம.மு.க. வேட்பாளர் 1689 பெற்று அவருக்கும் கீழ் நிலையில்தான் நிற்கிறார். இவைதான் கமலின் சந்தோஷத்துக்கு காரணம். 

பொள்ளாச்சியில் மட்டுமில்லை, தமிழகத்தில் மேலும் சில நாடாளுமன்ற தொகுதிகளில் அ.ம.மு.க. எனும் அ.தி.மு.க.வின் சக்தியில் ஒரு பகுதியை பெற்றிருக்கும், எம்.எல்.ஏ. தினகரனை தலைவராக கொண்டிருக்கும், மாளாத பண பலத்தை வைத்திருக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை விடவும்  எடுத்த எடுப்பிலேயே  ம.நீ.ம. முன்னிலை பெற்றிருப்பதுதான் நம்மவரை சந்தோஷிக்க வைத்துள்ளது.