விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண செயல்படுங்கள், இல்லாவிட்டால் ஆட்சியை விட்டு தள்ளி நில்லுங்கள் என்று  அதிமுகவுக்கு கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் மாநாடு காவிரிக்கான கண்டன பொதுக்கூட்டமாக நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய  அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ''காவிரி விவகாரத்தில் தமிழக அரசு நினைத்தால் தீர்வு உண்டு. ஆனால் அந்தத் தீர்வை நோக்கி தமிழக அரசு நகரவே இல்லை என குற்றம்சாட்டினார்.

மத்திய அரசின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு செயல்படுகிறது தமிழக அரசு. தீர்வு கிடைக்கும் என்று நினைக்கும்போது அரசியல்வாதிகள் புகுந்து குளறுபடி செய்து நமக்குள்ள உரிமையை தட்டிப்பறிக்கின்றனர்.

இப்போதாவது நமக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில், சட்ட நுணுக்கங்களைக் காட்டி, ஸ்கீம் என்றும், சில சாக்கு போக்குகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு தவறு என்று அழுத்தமாக கூறுகிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையெனில் தமிழகம் அமைதியான முறையில் ஒத்துழைக்க மறுக்கும் என தெரிவித்த கமல்ஹாசன் . வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை தான் என கூறினார்.

தமிழக ஆட்சியாளர்களே காவிரி பிரச்சினைக்குத் தீர்வு காண செயல்படுங்கள் அல்லது தள்ளி நில்லுங்கள். காவிரி பிரச்சினையில் தீர்வு எட்ட முடியவில்லை என்றால் தமிழக ஆட்சியாளர்கள் ஆட்சியை விட்டு விலகட்டும் என ஆவேசமாக பேசினார்.