கோயமுத்தூரில் கமல்ஹாசன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு இரண்டு நாட்கள் அரசியல் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. இதில் இரண்டாவது நாள் கலந்து கொண்டு தனது அறிவுரைகளையும், ஐடியாக்களையும் எடுத்து வைத்தார் கமல். பின் பொது நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்து கொண்டார். அதில் ஒன்றுதான் கல்லூரி விழா ஒன்று. 

ஆக்சுவலி உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்குதாராராக இருக்கும் கல்லூரி அது என பேசப்படும் கல்லூரி அது. அந்த கல்லூரியை துவக்கியது வேறு ஒரு நபர்தான் ஆனால் அமைச்சரின் வீடு அந்த கல்லூரியிலிருந்து நடை தூரத்தில்தான் இருக்கிறது. வேலுமணி  கடந்த ஆட்சியிலும், இப்போதும் அமைச்சராக இருக்கும் வகையில் அந்த கல்லூரி நிர்வாகத்துடன் ஏற்பட்ட நட்பு மற்றும் கல்லூரிக்கு அவர்  செய்து கொடுத்த வசதி வாய்ப்புகள் வகையில் அவரே அங்கு ஒரு பங்குதாரர் ஆகிவிட்டார் என்று கோயமுத்தூர் பக்கம் ஆளுங்கட்சி பேர்வழிகளே அழுத்திப் பேசுகின்றனர். 

அப்பேர்ப்பட்ட கல்லூரியில்தான் அ.தி.மு.க.வை துவைத்து தொங்கப்போட்டுக் கொண்டிருக்கும் கமல்ஹாசனை வைத்து நிகழ்ச்சி நடத்தினார்கள் சில அமைப்புகள். ’தடையேதும் இல்லை’ எனும் தலைப்பில் நடந்த அந்த நிகழ்ச்சியில் பேசிய கமல் மினிஸ்டருக்கும், அந்த கல்லூரிக்கும் இருக்கும் நட்பை தெரிந்து பேசினாரோ அல்லது இல்லையா என புரியவில்லை. ஆனால் வெளுத்து வாங்கிவிட்டார். 

“கல்லூரிகளுக்குள் கமல்ஹாசன் நுழைய கூடாது என்று எழுதப்படாத ஆணை ஒன்றை அதிகாரம் மையம் பிறப்பித்திருக்கிறதாம். தடைகளை வெல்வேன், சரித்திரம் படைப்பேன். கல்லூரிக்குள் பேச முடியாதென்றால் வெட்ட வெளியில் சந்திப்பேன் கல்லூரிப்பிள்ளைகளை. உங்கள் வயதிலேயே நான் அரசியலுக்கு வந்திருந்தால் இன்று இந்த நிலை எனக்கு இருந்திருக்காது, நமக்கும் இருந்திருக்காது.” என்றவர் தொடர்ந்து...

“ஒவ்வொரு மனிதனும் மாறினால்தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும். குவாட்டரும், ஸ்கூட்டரும் கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று நினைக்கின்றர். அதை வேண்டாம் என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு இருக்க வேண்டும்.” என்று  கர்ஜித்திருக்கிறார். 

அமைச்சர் வேலுமணியின் கோட்டைக்குள்ளேயே சென்று கமல் இப்படி மிரட்டிவிட்டு வந்திருப்பதற்கு ஆளுங்கட்சிக்குள்ளேயே பெரும் பரபரப்பு. ஏன் வேலுமணி இதை கண்டுகொள்ளவில்லை? என்று விசாரித்துப் பார்த்தால் ‘ஏற்கனவே உள்ளாட்சி துறையில் ஊழல் என்று ஒரு பிரச்னை போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவரது நிகழ்ச்சியையும் தடுத்து வீண் பிரச்னை வேண்டாம்! என்று அவர் நினைக்கிறார்.” என்கிறார்கள். 

ஆனால் வேலுமணி கண்டுக்காமல் இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கமல் ‘கல்வி நிறுவனங்களுக்குள் நான் நுழைய தடை விதிக்கிறார்கள்.’ என்று ஒரு சிலுப்பு சிலுப்பி, அவரை வெச்சு செஞ்சுட்டார். கமலின் இந்த அதிரடி மூலம் கோயமுத்தூரில் வேலுமணி மீதிருந்த பிரம்மாண்டம் உடைபட்டிருக்கிறது! என்கிறார்கள்.

‘அவர் எந்த கல்லூரிக்குள்ளும், கல்வி நிறுவனங்களுக்குள்ளும் செல்ல அரசு தடைசொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் எப்படி இந்த கல்லூரிக்குள் சென்றிருக்க முடியும்? கமல் ச்சும்மா நடிக்க வேண்டாம்!’ என்கிறது ஆளும் தரப்பு.