சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மெடிக்கல் செக்கப்புக்காக அனுமதிப்பட்டுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  கேரள அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கேரள மாநிலம், அட்டப்பாடியில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மது என்ற மனநிலை சரியில்லாத இளைஞரை, கடைகளில் உணவுப் பண்டங்களைத் திருடியதாக, கடந்த மாதம் 22-ஆம் தேதி ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. இந்தச் சம்பவம், கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கேரள முதலமைச்சர்  பினராயி விஜயன்  நேற்று அந்த இளைஞரின் வீட்டுக்கு சென்று, அவரது தாயார், சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

இதைத் தொடர்ந்து இன்று  அதிகாலை  1.00 மணிக்கு சென்னை வந்த பினராயி விஜயன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அப்பல்லோ  மருத்துவர்கள் குழு அவரை பரிசோதனை செய்தது. பின்னர் அவர் கேரள அரசு விருந்தினர் மாளிகையில்  ஓய்வெடுத்தார். அப்போது அவரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கமல்ஹாசன் கடந்த 21 ஆம் தேதி புதிய கட்சி தொடங்கியபோது பினராயி விஜயன் வீடியோவில் வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் கமல்ஹாசன் தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த பின்னர் முதல் ஆதலில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைத்தான் சந்தித்தார்.