ம.நீ.ம பொருளாளர் சந்திரசேகர் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சரத்குமாரின் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள கமல் ஹாசன், தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். 

இந்நிலையில் இன்று கோவையில் தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் மக்கள் கேண்டீன் திட்டம், மருத்துவ படிப்பிற்கு NEET2-க்கு பதிலாக SEET தேர்வு ஆகியவை நடத்தப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமல் பேசியதாவது: 6 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ள சூழலில் இலவசங்களை அறிவித்தால் கூடுதல் சுமை ஏற்படும். நிறைவேற்றக்கூடியவற்றையே மட்டுமே வாக்குறுதிகளாக கொடுத்துள்ளோம். மக்கள் கேண்டீன் என்பதையும், அம்மா உணவகத்தையும் ஒன்றாக பார்க்க வேண்டாம். ராணுவ கேண்டின் போலவே நியமான விலையில் மக்களுக்கு பொருட்கள் விற்கப்படும் எனக்கூறினார். 

ம.நீ.ம பொருளாளர் சந்திரசேகர் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், ‘பொருளாளர் என்பவர் தனி மனிதரும் கூட. எங்களுடைய கட்சியில் எவ்வித கணக்கு முரண்பாடும் இருக்காது. 80 கோடி கைப்பற்றதாக சொல்கிறீர்கள். ஆனால் கட்சிக்கு ஏற்ற மாதிரி தொகையை மாற்றிக்கூறுகின்றனர். சட்ட விதிமீறல்கள் ஏதாவது இருந்தால் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்கலாம். ஒருவேளை அது தேர்தல் நேரத்து வேலையாக கூட இருக்கலாம் என தெரிவித்தார். 

உடனே செய்தியாளர்கள் வருமான வரி செலுத்துவதை பெருமையாக பேசும் உங்களையும், கட்சியையும் இது பாதிக்காதா? என கேள்வி எழுப்பினர். அது என்னையும் பாதிக்காது, கட்சியையும் பாதிக்காது. அது தனிநபர் மீது நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனை. மக்கள் நீதி மய்யம் மீது நடத்தப்பட்ட சோதனை அல்ல. அவர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்காக நான் பதில் சொல்ல முடியாது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றவாளி கிடையாது என பதிலளித்தார்.