காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது எளிதான காரியம் அல்ல என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்துத் தெரிவித்திருப்பதற்கு மக்கள் நிதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரிப்படுகையை  எண்ணெய் பீப்பாயாக மாற்ற முயற்சி செய்கிறீர்களா என்றும் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இது வரை மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.

இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அவ்வளவு எளிதான காரியம்  அல்ல என கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டன் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிதின் கட்கரிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை உஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உச்சநீதி மன்ற நீதிபதி உட்பட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறது.

ஆனால், அதை நடைமுறைப்படுத்த இயலாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. காவிரிப் படுகையை ஒரு எண்ணேய் பீப்பாயாக மாற்றும் முயற்சிக்கு துணைப் போகும் விதமாகப் பேசுவதும், நடந்து கொள்வது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார்.

உச்சநீதி மன்றத் தீர்ப்பை மதித்து, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உத்தரவை ஆறு வாரங்களுக்குள் வெளியிட வேண்டும் என்றும் கமல் வலியுறுத்தியுள்ளார்.