Kamal hassan binarayee vijayan in cochi and thanks to support tamil students
நீட் தேர்வு எழுதுவதற்காக கேரளாவிற்கு சென்ற தமிழக மாணவ-மாணவிகளுக்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு உதவி செய்ததற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வின்போது 5000 ற்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களுக்கு கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அதே நேரத்தில் கேரள மாநிலத்துக்கு தேர்வு எழுதச் சென்ற தமிழக மாணவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நடவடிக்கை எடுத்திருந்தார். இது தமிழக மக்களிடையே பெரும் பாராட்டடைப் பெற்றது.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஆசியா நெட் தொலைக்காட்சி விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கேரள மாநிலம் கொச்சி நகருக்கு சென்றிருந்தார்.
அப்போது கொச்சியில் முதலமைச்சர் பினராயி விஜயனை கமல்ஹாசன் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிட நேரம் நீடித்தது.

இந்த சந்திப்பின்போது, இருவரும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசினர். குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதாவை ஆட்சி அமைக்கவிடாமல் மதசார்ப்பற்ற கட்சிகள் ஒன்றாக இணைந்து தடுத்தது பற்றி விரிவாக விவாதித்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு, பினராயி விஜயன் கமல்ஹாசனுக்கு மதிய உணவும் அளித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் , “கோவையில் ஜூன் மாத மத்தியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு கேரள முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார்.

அவர் வரும் தேதிக்கு ஏற்ப நிகழ்ச்சிக்கான திட்டம் வகுக்கப்படும். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையில் கேரளாவில் ஆட்சி அமைந்து 2 ஆண்டு காலம் நிறைவு பெற்றதற்கும் வாழ்த்து தெரிவித்தேன் என கூறினார்.
நீட் தேர்வு எழுதுவதற்காக கேரளாவிற்கு சென்ற தமிழக மாணவ-மாணவிகளுக்கு பினராயி விஜயன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு உதவி செய்ததற்கும் நன்றி தெரிவித்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்குவதற்கு முன்பாக கடந்த ஆண்டு திருவனந்தபுரத்தில், முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேசி இருந்தார். இந்த நிலையில் அவரை மீண்டும் கமல்ஹாசன் கேரளாவில் சந்தித்து பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
