ரஜினி ‘கட்சி துவக்குவேன்’ என்று சொன்னதோடு, கமல் கட்சியை துவங்கவும் செய்துவிட்ட நிலையில் தமிழகத்தில் ஒரு அனுமான அரசியல் பேச்சு நிலவியது. அது ”ரஜினி, கமல் இருவருமே பா.ஜ.வின் ‘பி டீம்’தான்.  அக்கட்சியின் கொள்கைகளுக்கு ஆதரவான நிலையில் நின்று செயல்பட்டு, மோடியின் கரத்தை வலுப்படுத்தும் பணியில் ரஜினி உள்ளார். கமலோ, இந்துத்வத்தை எதிர்த்து, சிறுபான்மையினரை ஆதரித்து, தி.மு.க.வின் வாக்குவங்கியை சிதறடித்து, ஸ்டாலினின் வெற்றியை தடுக்கும் பணியில் உள்ளார். எனவே இருவருமே பா.ஜ.வின் கைப்பிள்ளைகள்தான்.  இருவருக்கும் அஸைன்மெண்ட் கொடுத்திருப்பது பா.ஜ.தான்!” என்று பேசப்பட்டது. 

இன்று வரையிலும் கூட இந்த வாதம் போய்க் கொண்டுதான் இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் எதிர்க்கும் அளவில்  பத்து சதவீத எதிர்ப்பை கூட பா.ஜ.வுக்கு எதிராக கமல் பதிவு செய்வதில்லை! இதை வைத்துப் பார்க்கும் போது அவர் பா.ஜ. கட்சிக்கான ஆள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை! என்று வெளுத்தெடுக்கிறார்கள் விமர்சகர்கள். 

ஆக, சூழல் இப்படிப் போய்க் கொண்டிருக்கும் நிலையில் பாரதிய ஜனதா இந்த விமர்சனத்தைப் பற்றி என்ன சொல்கிறது? என்று பார்த்தால் அவர்களோ கமலை கழுவி ஊற்றுகின்றனர் கண்டபடி. ”கமல் எங்களின் ‘பி’ டீமா? அதைவிட அபத்தம் வேறேதும் இருக்கப்போவதில்லை. அவர் எப்போதுமே எங்களையும், இந்து மதத்தையும் உரசுவதிலேயேதானே பிஸியாக இருக்கிறார்! இப்போது கூட ‘ஷா’வோ, சுல்தானோ, சாம்ராட்டோ என்று மிகக் கொச்சையாக பா.ஜ.வை விமர்சித்திருக்கிறார். சமீபத்தில் கூட ‘நாட்டின் முதல் தீவிரவாதி இந்துதான்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். கமல்ஹாசனின் பேச்சு எந்த காலத்திலும் பா.ஜ.கட்சிக்கு ஒத்துவராததாகவே உள்ளது. எனவே நிச்சயம் அவர் எங்களின் பி டீம் கிடையாது.” என்று  கமலுக்கு குட்டு வைத்திருக்கிறார்கள். 

தங்கள் தலைவரை இப்படி செம்ம டோஸ் விட்டு பா.ஜ. விமர்சித்ததில் மக்கள் நீதி மய்யம் செம்ம கடுப்பில் இருக்கிறது. 
அதே வேளையில் பா.ஜ.டீமோ.... ”தமிழகத்தில் திராவிட இனவாதம் முற்றிலுமாக அழிந்துவிட்டது. அத்திவரதருக்கு கூடிய ஒரு கோடி மக்களே இதற்கு சாட்சி. எனவே தமிழகத்தில் பா.ஜ. நிச்சயம் மலரும், வளரும்.” என்றிருக்கிறார்கள். 
பாப்போம், பாப்போம்!