மக்கள் தரும் நம்பிக்கையில்தான் மீசையை முறுக்குகிறேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார். 

நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமலை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த தேர்தலோடு கமல்ஹாசனின் கலாச்சாரம் முடிந்து விடும். வீரபாண்டிய கட்டபொம்மனைப் போல் மீசையை முறுக்கினால், அரசியலில் தூக்கில் போட்டு விடுவார்கள். அரசியல் என்பது கடல். நீச்சல் தெரியாமல் கடலில் இறங்கி விழிப்பதைப் போல, யார் பேச்சையோ கேட்டு, கமல் அரசியலில் இறங்கிவிட்டு, கரையேற முடியாமல் தவிக்கிறார் என்று கடுமையாக சாடியிருந்தார். 

இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மக்கள் தரும் நம்பிக்கையில்தான் மீசையை முறுக்குகிறேன் என கமல் பதிலடி கொடுத்துள்ளார். இது பணம் கொடுத்து வரவழைக்கப்பட்ட கூட்டம் இல்லை. அன்பினால் தானாக சேர்ந்த கூட்டம். நீங்கள் இருக்கும் நம்பிக்கையில் தான் எனது மீசையை முறுக்குகிறேன். ஆணவத்தால் அல்ல. 

இந்த முறுக்கு, நேர்மையின் முறுக்கு. தமிழக எல்லையான ஓசூரில், குண்டூசி முதல் ஆகாய விமானம் வரை தயாரிக்கப்படுகிறது. ஆனால், உங்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது. எதுவுமே கிடைக்கவில்லையே. அதனை பெறுவதற்காக ஒன்று திரள்வோம். தற்போது இருக்கும் ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.